உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 137

மி

அருகக்கடவுள் எழுந்தருளியிருந்து அறவுரை அருளுகிற இடம் சமவசரணம் என்பது. சமவசரணத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு மாடவீதிகள் உள்ளன. இந்த மாடவீதிகளில் இரண்டாவதாகவுள்ளது காதிகாபூமி எனப்படும். காதிகாபூமி, சமவசரணத்தைச் சூழ்ந்து அகழிபோன்ற நீர்நிலையாகும். இரண்டு குரோசச் சுற்றளவு உள்ளதாய் ஒன்றரைக்காத அகலமுடையதாய் இருக்கும். பார்ப்பதற்கு மிகுந்த ஆழமுள்ளதுபோல் தோன்றினாலும் இதில் இறங்கினால் முழங்கால் அளவுமட்டும் நீருள்ளதாயிருக்கும். மேடுபள்ள மில்லாமல் சமதரையாகவுள்ள இந்தக் காதிகாபூமி பலவித நீர்ப்பூக்கள் பூத்துப் பார்வைக்கு இந்திரவில்லைப்போன்று பலநிறமாகக் காணப்படும். அருகப்பெருமானை வணங்குவதற்காகச் செல்லும் அன்பர்கள் இதில் இறங்கிச் செல்லவேண்டும். செல்லும் போது அருகப்பெருமான் திருவடியில் இடுவதற்காகத் தாமரை அல்லி முதலிய பூக்களைப் பறித்துக்கொண்டு போவார்கள். இவ்வாறு சமவசரணத்தில் உள்ள காதிகாபூமி என்னும் அகழியைப் பற்றிச் சமணசமய நூல்கள் கூறுகின்றன. சித்தன்னவாசலில் உள்ள இந்தச் சமணக்கோயிலில், மண்டபத்தின் மேல் விதானத்தில் ஓவியமாக எழுதப்பட்ட இந்தத் தாமரைக்குளக் காட்சி காதிகா பூமியைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை.

குகைக்கோயிலின் பாறைச்சுவர்கள் கரடுமுரடாக இருக்கும். அச்சுவர் வண்ணஓவியம் எழுதுவதற்கு ஏற்றவை அல்ல. அச்சுவர் களில் ஓவியம் எழுதவேண்டுமானால், பாறைச்சுவரின்மேல் மெல்லிய சுதை பூசிய பின்னர் வண்ண ஓவியம் எழுதவேண்டும். சித்தன்ன வாசல் பாறைச்சுவரிலும் மெல்லிய சுதை பூசப்பட்டு அதன்மேல் ஓவியம் எழுதப்பட்டுள்ளன. அஜந்தா, சிகிரியா முதலிய குகை களிலுள்ள ஓவியங்களும் இவ்வாறு சுதை பூசப்பட்டு அதன்மேல்

எழுதப்பட்டவைகளே.

மகேந்திரவர்மன் காலத்தில், அவனுடைய குகைக் கோயில் களில் எழுதப்பட்ட ஓவியங்கள் யாவும் மறைந்து விட்டன. இந்தச் சித்தன்னவாசல் குகைக்கோயிலின் ஓவியங்கள் மட்டும், ஒளி ளி மழுங்கிபோய் அரைகுறையாக வேனும் காட்சியளிப்பது நமது நற்காலமாகும். காலத்தினால் மிக முற்பட்ட தமிழ்நாட்டு ஓவியம் இது ஒன்று தான்; பிற யாவும் இதற்குப் பிற்பட்ட காலத்தன.