உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

சரிதையை நாட்டியமாக நடித்தும் பாடியும் நடனம் புரிகிறார்கள் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. ஆகவே, அருகக்கடவுள் எழுந்தருளியுள்ள இந்தச் சமணக் குகைக் கோயிலில் அரம்மையர் நாட்டியம் ஆடுவதுபோன்ற ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன.

மூன்றாவதாகக் கண்ணையும் கருத்தையும் கவர்கிற அழகான ஓவியம் தாமரைக்குளம் ஆகும். இத் தாமரைக்குள ஓவியம் இக் குகைக்கோயில் மண்டபத்தின் விதானத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கைவன்மை படைத்த ஓவியப்புலவனின் கலை நுட்பத்தைக் காட்டும் இந்த ஓவியம், வண்ணங்கள் மழுங்கிச் சிதைந்துள்ள நிலையிலும் தாமரைக்குளத்தின் அழகைக் காட்டுகிறது.

இக் குளத்தில் செந்தாமரை வெண்டாமரை அல்லி ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் பூத்து நிறைந்திருக்கின்றன. செழித்து வளர்ந்த தாமரையிலைகள் நீர் தெரியாதபடி குளத்தை மூடிக்கொண்டிருக் கின்றன. அன்னப்பறவைகளும் மீன்களும் இடையிடையே காணப் படுகின்றன. எருமையும் யானையும் நீரில் நிற்கின்றன. ஆழமற்ற இந்தக் குளத்தில் முழங்கால் அளவுள்ள நீரில் மூன்று ஆட்கள் இறங்கித் தாமரைப்பூக்களை நாளத்தோடு கொய்து கற்றையாகக் கட்டித் தோளின்மேல் வைத்துக்கொண்டு வருகிறார்கள். தாமரைக் குளத்தின் இனிய இயற்கைக்காட்சி இந்த ஓவியத்தில் நன்கு அமைந்திருக்கிறது. இந்தத் தாமரைக் குளத்தின் ஓவியம் எதைக் குறிக்கிறது?

சித்தன்னவாசல் குகைக்கோயிலில் உள்ள தாமரைக்குளத்து ஓவியம்