உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடற் கலை*

ஆடற்கலையைக் கூத்துக்கலை என்றும் கூறலாம். கூத்துக்கலை மிகப் பழமையானது. நாகரிகம் பெறாத மக்கள் முதல், நாகரிகம் பெற்ற மக்கள் வரையில், குக்கிராமம் முதல் நகரம் வரையில், எல்லா மக்களும் கூத்துக்கலையை ஆதிகாலம் முதல் ஆடியும் ஆடுவதைக் கண்டும் மகிழ்ந்து வருகிறார்கள். குறிச்சியில் வாழ்ந்த குக்கிராம வாசிகள் தங்கள் கிராமத்து நடுவில் அமைந்திருந்த மரத்தின்கீழே, பால்போல் நிலாவொளி சொரிகிற முழுநிலா இரவில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். செல்வர்களும் அரசர்களும் தங்களுடைய மாளிகை களிலே, நிலா முற்றத்தில் பால் சொரிவது போன்ற நிலா வெளிச்சத்திலே ஆடல் பாடல்களை நிகழ்த்தியும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தார்கள். இக்காலத்திலும் ஆடற்கலை எங்கும் நடைபெறுகிறது. ஆடற்கலையைத் தனியாக ஆடுவது இல்லை. ஆடற்கலை இசைப் பாட்டுடன் இணைந்து நடப்பது. ஆடற்கலைக்குப் பாடப்படுகிற பாட்டு வெண்டுறைப் பாட்டு என்று கூறப்படுகிறது. பழங் காலத்திலே ஆடற்கலை செம்மையாகவும் நன்றாகவும் வளர்க்கப்பட்டது.

ஆடற் கலைகளில் பல இந்தக் காலத்தில் மறைந்து விட்டன. அவற்றைப்பற்றிப் பழங்காலத்து நூல்களிலே சிறு குறிப்புக்களைக் காண்கிறோம். மறைந்துபோன பழமையான ஆடல்களில் பெயர் பெற்றவை பதினோராடல். மனிதர் ஆடிய இந்த ஆடல்களை ஆதி காலத்தில் தெய்வங்கள் ஆடியதாகக் கருதப்பட்டபடியால், இந்த ஆடல்கள் தெய்வ விருத்தி என்று பெயர் பெற்றன. தெய்வங்கள் அவுணர்களுடன் போர் செய்து வென்று அவ்வெற்றியின் மகிழ்ச்சி யினால் இந்த ஆடல்களை ஆடினார்கள் என்று கூறப்படுகிறது. இப்பதினோராடல்களாவன:

1. அல்லியக் கூத்து, 2. கொடுகொட்டியாடல், 3. குடையாடல், 4. குடக்கூத்து, 5. பாண்டரங்கம், 6. மல்லாடல், 7. துடிக்கூத்து, 8. கடையக்கூத்து, 9. பேடாடல், 10. மரக்காலாடல், 11. பாவைக்கூத்து. * நுண்கலைகள் (1967) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.