உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் - 253

பெண். மற்றொருத்தி கன்னிப் பருவத்தையடைய விருக்கிற இளம்பெண். இவர்களைச் சூழ்ந்து பரந்த நிலப்பரப்பு காணப்படு கிறது. எதிரிலே, அலைமோதுகின்ற அகன்று ஆழமான நீலக் கடற்பரப்பு காட்சியளிக்கிறது. மேலே, உயரத்தில் பரந்த பெரிய வானம் காணப் படுகிறது. காதலையறியாத இளம்பெண் காதலையறிந்த கன்னிப் பெண்ணைக் கேட்கிறாள். “என்ன, காதல் காதல் என்று கூறுகிறாய்! காதல் என்ன அவ்வளவு பெரிதா? நீயும் நானும் எத்தனை காலமாகப் பழகி அன்பாக இருக்கிறோம்? நம்முடைய அன்பைவிட உங்களுடைய காதல் அவ்வளவு பெரியதா?”

இதற்கு விடையளிக்கிறாள் காதலையறிந்த கன்னிப்பெண், தான் கண்ட காதலின் ஆழத்தையும் அகலத்தையும் உயரத்தையும் தன் இளந்தோழிக்கு அளந்து கூறுகிறாள்.

காதல் இந்தப் பெரிய உலகத்தைவிட மிகமிகப் பெரியது. அதன் உயரம், எட்ட முடியாத இதோ இந்த வானத்தைவிட அதிக உயரமானது, ஆழமோ, இதோ இந்த ஆழமான கடலின். ஆழத்தை விட அதிக ஆழமானது என்று காதலின் அளவைத் தெரிவித்தாள் அப் பெண்மகள்.

66

“நிலத்திலும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று!

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!”

(உயர்ந்தன்று-உயர்ந்தது. அளவின்று-அளவில்லாதது.)

நான்கு அடியுள்ள இந்தச் சிறிய சொல்லோவியத்திலே இரண்டடிக்குள்ளேயே மிகச் சுருக்கமாகக் காதலின் அகலம் ஆழம் உயரங்களைச் சொல்லிவிட்டாள் அப் பெண். இல்லை, அப் பெண்ணின் வாயிலாக இலக்கியப் புலவர் கூறிவிட்டார். இந்தச் சொல்லோவியத்தைப் புனைந்தவர் தேவகுலத்தார் என்னும் பெயருள்ள சங்ககாலத்துப் புலவர். இவருடைய இந்த அழகான சிறிய செய்யுள் குறுந்தொகையில் மூன்றாவது செய்யுளாக அமைந்துள்ளது.

பெரிய கருத்தமைந்த இந்தச் சிறிய சொல்லோவியத்தில் கூறப்படுகிற காதலின் அகலம் ஆழம் உயரங்களை ஓவியக் கலைஞர் ஓவியமாகவோ சிற்பமாகவோ அமைத்துக்காட்ட இயலுமோ? நிலத்தையும் கடலையும் வானத்தையும் அழகாக வரைந்து காட்டலாம்.