உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

அரண்மனைத் தோழி அரசனிடம் வந்து இந்தச் செய்தியைக் கூறுகிறாள்:

"தேங்குலாம் அலங்கல் மாலைச் செறிகழல் மன்னர்மன்ன!

பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக் கோங்கெலாம் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல் பாங்கெலாம் செம்பொன் பூப்ப விரிந்தது பருவம்' என்றாள்.

(சூளாமணி, இரதநூபுரச் சருக்கம் - 43)

பொன்னிறமுள்ள கோங்குமலர் கண்ணையுங் கருத்தையும் பறிக்கும் எழில் உடையது. பறித்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மோந்து மணத்தை நுகரலாம் என்னும் விருப்பத்தைத் தரத்தக்கது அதனுடைய செவ்வி. இவ்வளவு அழகும் செவ்வியுமுள்ள கோங்கு மலருக்கு மணமில்லையே! மணம் மட்டும் இருந்தால் எவ்வளவு சிறப்புப்பெறும்! செல்வ நலம் பெற்றிருந்தும் குணநலம் பெறாதவர் போலல்லவா இருக்கிறது!

ஓவியக் கலைஞர், கோங்கு மலரை எழில் மிக்க ஓவியமாகத் தம்முடைய கைத்திறத்தினால் வண்ணச் சித்திரமாக்கித் தரமுடியும். ஆனால், வயந்த திலகை வாயிலாகக் காவியப் புலவர் கூறுவது போல, ‘ஈகைக் குணமில்லாத செல்வர் புகழ் பெறாதது போல, கோங்கு மலர் மணமில்லாமலிருக்கிறது' என்னும் சிறந்த கருத்தை ஓவியக் கலைஞர் சித்திரத்தில் எழுதிக் காட்ட ஒண்ணாது.

கல்வியிற் பெரியன் கம்பன்' என்பது பழமொழி. கம்ப சூத்திரங்களை யறிந்து மகிழாதவர் யார்? இந்தக் காவியப் புலவனின் சொல்லோவியங்கள் சிலவற்றைப் பார்ப்போம். ஓவியக் கலைஞனும் சிற்பக் கலைஞனும் தங்களுடைய ஓவியத்திலும் சிற்பத்திலும் காட்டமுடியாத நுட்பங்களை இவர் எப்படி எளிமையாகத் தம்முடைய கவிதையில் காட்டுகிறார் என்பதைப் பார்ப்போம்.

கவிதைப் பேராறு:

இராமனும் இலக்குவனும் கோதாவிரியாற்றைக் கண்டார்கள் என்று காவியக் கலைஞர் கம்பர் கூறுகிறார். கூறுகிறவர், கோதாவிரி யாற்றைத் தேர்ந்த புலவரின் தமிழ்க் கவிதைக்கு ஒப்புமை கூறுகிறார் இச் சொல்லோவியத்தைப் படியுங்கள்: