உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பாண்டியனுடைய அவையில் இசைப் புலவராக இருந்தார். பிறகு மதுரைச் சொக்கநாதர் ஆலயத்தில் யாழ் வாசித்துக் கொண்டிருந்தார். இவருடைய யாழ் இசைக்கு மனமுருகிய சொக்கப்பெருமான், இவருக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பும்படி தமது அடியா ராகிய சேர நாட்டை யரசாண்ட சேரமான் பெருமாள் நாயனாருக்குத் திருமுகச் சீட்டு எழுதி யனுப்பினார் என்றும், அதன்படியே சேரமான் பெருமாள் இவருக்குப் பெருநிதி கொடுத்து அனுப்பினார் என்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.21

பாணபத்திரர் காலத்தில், மதுரைக்கு வடக்கேயுள்ள சோழ நாட்டில் இருந்த புகழ்பெற்ற யாழ்ப்பாணன் ஏமநாதன் என்பவன். ஏமநாதன் தன் சீடர்களோடு மதுரைக்கு வந்து, பாண்டியனிடம் சிறப்புகள் பெற்றுப் பாணபத்திரனுடன் இசை வெற்றிகொள்ள எண்ணினான். அப்போது, சொக்கநாதரே பாணபத்திரனுடைய மாணவன் போன்று வந்து ஏமநாதன் முன்பு இசை பாடி அவனை மதுரையை விட்டு ஓடச் செய்தார் என்று மேற்படி திருவிளையாடற் புராணம் கூறுகிறது.22

வைணவ அடியார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரும் யாழ்வாசிப்பதிலும் இசைபாடுவதிலும் வல்லவராக இருந்தார்.

கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, யாழ் தமிழ்நாட்டில் வழக்கொழிந்து விட்டது. அதற்குப் பதிலாக இப்போது வழங்குகிற வீணை என்னும் இசைக் கருவி வழங்கலாயிற்று.

ம்

வீணை: வில் வடிவம் உள்ள பழைய இசைக் கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கத்தில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவிட்டது. வீணை என்னும் கருவி கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாட்டில் வழங்கி வருகிறது என்று கருதலாம். யாழ், கி.பி. 11 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கிழந்து விட, வீணை இன்றும் நிலை பெற்றிருக்கிறது. மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில், யாழ் வீணை ஆகிய இரண்டு இசைக் கருவிகளும் வழங்கிவந்தன போலும். ஆகையினால்தான், அவர் “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்,இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" என்று இரண்டினையும் கூறினார். இப்போது வீணை சிறந்த இசைக் கருவியாக விளங்குகிறது.