உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

விறகு வெட்டி பாடினான். உளம் இனிக்கச் செவி இனிக்க இசைத்திறம் அமையப் பாடிய சாதாரிப் பண்ணைக் கேட்ட ஏமநாதர் செயலற்று நின்றார். பிறகு உணர்வு பெற்று வீட்டுக்குள் நுழைந்தார்.

வீட்டுக்குள் சென்ற ஏமநாதர் தமக்குள் எண்ணினார். பாணபத்திரரால் புறக்கணிக்கப்பட்ட சீடன் விறகு விற்றுப் பிழைப்பவன் - இவ்வாறு உயர்ந்த இசைப்புலமை பெற்றிருந்தால், பாணபத்திரர் இசைப்புலமை எப்படி இருக்கும்! அவரை இசை வாதில் வெல்வது எப்படி முடியும்? என்று எண்ணினார். அன்றிரவு ஏமநாதர், தமது சீடர்களுடனும் பரிவாரங்களுடனும் ஒருவருக்கும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய்விட்டார்.

அடுத்த நாள் பாண்டியன் அவையில் மக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர், பாணபத்திரருக்கும் ஏமநாதருக்கும் நடைபெறப்போகும் இசை வெற்றியைக் காண்பதற்காக. குறித்த நேரத்தில் பாணபத்திரர் வந்து சேர்ந்தார். ஏமநாதர் வரவில்லை. நேரஞ் சென்றது. இன்னும் வரவில்லை. ஆட்கள் அழைத்துவரச் சென்றார்கள். ஏமநாதர் வீட்டில் ஒருவரும் இலர். நகரமெங்கும் தேடினார்கள். ஏமநாதர் காணப்படவில்லை. “நேற்று மாலை ஒரு விறகு வெட்டி வந்து ஏமநாதர் வீட்டுத் திண்ணைமேல் இளைப்பாறினான். அவன்

அற்புதமாக ஒரு சாதாரி இராகம் பாடினான். ஏமநாதர் இன்னொருமுறை அந்த இசையைப் பாடும்படி கேட்டார். அவன் மறு முறையும் மிக நன்றாகப் பாடினான். அவன் பாணபத்திரருடைய சீடன் என்று சொல்லிக்கொண்டான் என்று அத்தெருவிலிருந்தவர் கூறினார்கள்.

பாண்டியன் பாணபத்திரரை நோக்கினான். பாணபத்திரர் வணங்கி, “அரசே! விறகு விற்கும் சீடர் எனக்கு ஒருவரும் இலர். சொக்கப் பெருமானிடம் முறையிட்டு, ஏமநாதரை வெற்றிகொள்ள எனக்கு ஆற்றல் தந்தருளும்படி வேண்டினேன். எனக்கு வேறு ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.

அவையிலிருந்தவர் அனைவரும் வியப்படைந்தார்கள். பாணபத்திரருக்காகச் சொக்கப் பெருமானே விறகு வெட்டியாக வந்து முல்லைப் பண்பாடி ஏமநாதரை விரட்டி விட்டார் என்று சொல்லி வியந்தார்கள். பாண்டியன் பாணபத்திரருக்குச் சிறப்புச் செய்தான். பெரும்பொருள் பரிசு அளித்து, அவரை யானைமேல் ஏற்றி நகர்வலம்