உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பெயருள்ள ஆசிரியர், கிருட்டினராயர் மீது மஞ்சரிப்பா என்னும் நூலை இயற்றினார் என்று தெரிகிறது. கிருட்டினராயர் என்பவர் கிருட்டின தேவராயர் என்னும் பெயருடைய விஜயநகரத்து அரசர் ஆவார். இவர் கி.பி. 1509 முதல் 1529 வரையில் அரசாண்டார். எனவே 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நூல் இயற்றப் பட்டது.

மஞ்சரிப்பா, புறத்திணையும் அகத்திணையும் விரவி வந்த செய்யுள்களைக் கொண்டது என்பர். இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 60. மல்லிநாதர் புராணம்

இது ஒரு சமண சமய நூல். மணிப்பிரவாள வசனநடையில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்னும் நூலில், 19-ஆம் தீர்த்தங்கரராகிய மல்லிநாதசுவாமி புராணத்தில், பழைய இரண்டு செய்யுட் பகுதிகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த மேற்கோள் செய்யுள்களை நோக்கும்போது, மல்லிநாதர் புராணம் என்னும் ஒரு நூல் தமிழில் இருந்திருக்கவேண்டும் என்றும், அது பின்னர் மறைந்துவிட்டிருக்க வேண்டும் என்றும் கருதவேண்டியிருக்கிறது. மேற்கோள் காட்டப் பட்ட செய்யுட் பகுதிகளை இங்குக் காட்டுவதற்கு முன்பு, மல்லிநாதர் என்னும் தீர்த்தங்கரருடைய கதையை அறிந்துகொள் அமைவுடைத்து. இந்தப் புராணத்தின் கதைச் சுருக்கம் இது:

கச்சகாவதி நாட்டின் அரசன் வைசிரவணன் என்பவன் வீதசோக நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டு வந்தான். அந்த அரசன், கார்காலத்தில் ஒரு நாள் வனக் காட்சியைக் காணச் சென்றான். வனத்திலே மிகப் பெரியதோர் ஆலமரத்தினைக் கண்டு வியந்து மகிழ்ந்தான். அந்த ஆலமரம் நூற்றுக்கணக்கான விழுதுகளால் தாங்கப்பெற்று, விண்ணுற ஓங்கி எண்டிசையும் பரவிக் கிளைத்துத் தழைத்துத் தளிர்த்துக் காண்பவர் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து நின்றது. அந்த ஆலமரத்தினைக் கண்டு வியந்து மகிழ்ந்த அரசன், அதற்கு ‘வனஸ்பதி ராசன்' என்று சிறப்பு பெயர் கொடுத்து, அந்த மரத்தைச் சுற்றிலும் மேடையும் கைப்பிடிச் சுவர்களும் அமைத்து, அதற்குக் காவலர்களையும் அமைத்துச் சென்றான்.

சில காலத்திற்குப் பின்னர், அரசன் அவ்வழியாக வந்தபோது, அந்த ஆலமரம் அங்குக் காணப்படவில்லை. இடி விழுந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இதனைக் கண்ட அரசன் மனம்