உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பொருளைக் கூறும் நூல். இன்னிசை என்பதற்கு ஈண்டு இனிய புகழ் என்று பொருள் கொள்ள வேண்டும். கொடை, வீரம் முதலியவற்றில் இசை பெற்ற (புகழ் பெற்ற) ஒருவர்மீது அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பட்ட நூல் இது என்பது தெரிகிறது. செட்டிமார்களின் புகழைக் கூறும் நூல் ஒன்றிருந்தது. அதனை இயற்றியவர் செயங் கொண்டார் என்னும் புலவர்' செட்டிமார்களின் புகழைக் கூறும் அந் நூலுக்கு இசையாயிரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அது போன்று, இன்னிசை மாலை என்னும் இந்நூலும் ஒருவருடைய புகழைக் கூறுவதாக இருத்தல் வேண்டும்.

8. கச்சிக் கலம்பகம்

காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர்மீது பாடப்பட்டது கச்சிக் கலம்பகம். இக்கலம்பகத்தைப் பாடியவர், காஞ்சீபுரம் ஞானப்பிரகாசர் மடத்தைச் சேர்ந்த தத்துவப்பிரகாச ஞானப்பிரகாசர் என்பவர். இவர் விஜயநகரத்து அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலே மடாதிபதியாய் இருந்தவர். கிருஷ்ணதேவராயர்மேல் மஞ்சரிப்பா என்னும் நூலையும் கச்சிக் கலம்பகத்தையும் இவர் இயற்றியிருக்கிறார். இச்செய்தியைத் தொண்டைமண்டல சதகச் செய்யுளினாலறியலாம். அச்செய்யுள்:

வானப்ர காசப் புகழ்க்கிருஷ்ண ராயர்க்கு மஞ்சரிப் பா கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகஞ்செய் ஞானப்ர காச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த

மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே.

இந்த இரண்டு நூல்களும் இப்போது கிடைக்கவில்லை பூண்டி அரங்க நாத முதலியாரால் செய்யப்பட்ட கச்சிக் கலம்பகம் என்னும் வேறு ஒரு நூலுமுண்டு.

9. கண்டனலங்காரம்

களவியற் காரிகை உரையாசிரியரும், நம்பி அகப்பொருள் உரை யாசிரியரும் கண்டனலங்காரம் என்னும் நூலிலிருந்து சில செய்யுள் களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இந்நூலாசிரியர் யார், எப்போது இந்நூல் இயற்றப்பட்டது என்னும் செய்திகள் தெரியவில்லை.