உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வித்துவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்குடும்பத்திலுள்ள பொருள்களையும் சொத்துகளையும் பாகம் செய்து கொள்ளும்போது, ஏட்டுச்சுவடிகளையும் பங்கிட்டுக்கொள்வது வழக்கம். பங்கிட்டுக் கொண்டவர்களில் கல்வி அறிவில்லாதவர்களும் இருப்பார்கள். படிக்கத் தெரியாமல் இருந்தாலும் சுவடிகளிலும் பங்கு கேட்டு வாங்கு வார்கள். அவர்களிடம் சென்று ஏடுகளின் கதி யாது? பதினெட்டாம் பெருக்குக்கும், அடுப்புக்கும், சிதலுக்கும் அவை இரையாகிவிடும். தீயில் எரிந்த ஏடுகள்

வரகுணராம பாண்டியன், அதிவீரராம பாண்டியன் என்பவர்கள் திருநெல்வேலியில் அரசாண்டிருந்த பாண்டிய அரசர்கள். இருவரும் தமையன்தம்பி முறையினர். பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பாண்டி நாடு அயல் நாட்டவர் கையில் சிக்கியபோது, அவர்களின்கீழ்ச் சிற்றரசராக இருந்தவர்கள். இவர்களில் அதிவீரராம பாண்டியன் தமிழில் நைடதம் என்னும் காவியத்தையும், வேறு நூல்களையும் இயற்றிப் புகழ் படைத்தவர். இவர் இயற்றிய நைடதத்தைப் பற்றி ‘நைடதம் புலவர்க்கு ஔடதம்' (ஔடதம் அமிர்தம்) என்னும் பழமொழி வழங்குகிறது. இவருடைய தமையனாரான வரகுணராம பாண்டியனும் கல்வியில் சிறந்த புலவர். வரகுணராமனின் மனைவியும் சிறந்த புலமை வாய்ந்தவர். அதிவீரராமன் நைடத்தை இயற்றி, அதனைத் தம் தமைய னிடம் அனுப்பி, அதைப் படித்துப் பார்த்து அது பற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டாராம். தமையனான வரகுணன் அந்நூலைத் தம் மனைவியிடம் கொடுத்து மதிப்புரை கூறும்படி சொன்னாராம். அரசியார் அதைப் படித்துப் பார்த்து, இதன் நடை, வேட்டை நாயின் ஒட்டம்போல் இருக்கிறது என்று கூறினாராம். வேட்டை நாய் வேகமாக ஒடி வேட்டைப் பொருள் சிக்கியவுடன் ஒட்டத்தின் வேகம் குறைவது போல, இந்நூலில் சுயம்வரகாண்டம் வரையில் இருக்கிற செய்யுள் நடைபோல் மற்றக் காண்டங்களில் இல்லை என்பது கருத்து.

இத்தகைய புலமை வாய்ந்த அரசகுடும்பத்தில் அருமையான ஏட்டுச்சுவடிகள் ஏராளமாக இருந்தன. வரகுணராமன் காலமான பிறகு, அவருக்குச் சந்ததி இல்லாதபடியால், அவருடைய சொத்துகள் திரு நெல்வேலியில் கரிவலம்வந்த நல்லூரில் இருக்கும் பால்வண்ண நாதர் கோவிக்குச் சொந்தம் ஆயின. அவற்றுடன் அவருடைய நூல் நிலையத்திலிருந்த ஏட்டுச்சுவடிகளும் கோவிலுக்குச் சேர்ந்து விட்டன அவருடைய சொத்துகளைப் பெற்றுக்கொண்ட கோயில் அதிகாரிகள், வரகுணராமனுக்கு ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்துவருகின்றனராம்.