உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

கோவையும், நாகூர் ஆண்டகைமீது நாகூர்க் கலம்பகமும் இயற்றினார். ஆரிபு நாயகம், நாகூர்ப்புராணம், பதாயிகுக் கலம்பகம், கன்ஜுல் கறாமாத்து என்னும் நூல்களையும் இயற்றினார். மற்றும், திருமக்காத் திருவந்தாதி, மதினாக் கலம்பகம், பஹனஷா வசனகாவியம், சமுத்திர மாலை, உமறு பாஷாவின் யுத்த சரித்திரம், சீறாப்புராண வசனம், அரபுத்தமிழ் அகராதி, புலவர் ஆற்றுப்படை என்னும் நூல்களையும் இயற்றினார்.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836-1886)

பழனியில் பிறந்தவர் இவர். இவருடைய குடிக்குமாம்பழக் குடி என்பது பெயர். அப்பெயரே இவர் பெயராக அமைந்துவிட்டது. இளமையில் இவருடைய தந்தையாராகிய முத்தைய ஆசாரியாரிடத்திலும் பிறகு. மாரிமுத்துக் கவிராயரிடத்திலும் கல்வி பயின்றார். வடமொழியும் அறிந்தவர். இளமையிலேயே பெரியம்மை நோயினால் கண்பார்வை இழந்தார்.

பாப்பம்பட்டி வேங்கடசாமி நாயக்கர் என்னும் செல்வரின் மேல் வேட்டைப் புகழ்ச்சி, புலப் பவனி, குறவஞ்சி, கீர்த்தனை முதலிய பிரபந்த நூல்களை இயற்றி அவரிடம் பரிசு பெற்றார். இராமநாதபுர அரண்மனைப் புலவராக இருந்தார். இராமநாதபுரம் பொன்னுச் சாமித் தேவராலும், முத்துராமலிங்க சேதுபதியாலும் ஆதரிக்கப்பட்டவர். பொன்னுச்சாமித் தேவரால் 'கவிச் சிங்கம்' என்னும் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டார்.

இவர் இயற்றிய நூல்கள். விநாயக மூர்த்தி பதிகம், பழநிப் பதிகம், குமரகுருபர பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்திற்பதிகம், பழநி நான்மணிமாலை, திருப்பழநி வெண்பா, பழநி வெண்பா அந்தாதி, பழனபுரிமாலை, குமரனந்தாதி, சிவகிரி யமக வந்தாதி, பழநிக் கோயில் விண்ணப்பம், தயாநிதிக் கண்ணி முதலியன. இவர் இயற்றிய நூல்கள் ‘மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு' என்னும் பெயருடன் அச்சிடப் பட்டுள்ளன.

முத்துச்சாமிக் கவிராயர் (1834-1899)

திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலைச் சேர்ந்த நகரம் என்னும் ஊரில் பிறந்தவர். இசைக் கலையில் வல்லவர். இவர் இயற்றிய நூல்கள்: போடி நாயக்கனூர் பெருநிலைக்கிழார்மீது அன்னம் விடுதூது,