உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

41

பிராஃமி எழுத்துக்களின் ஒலிகளைத் தெரிந்து கொண்டு, பின்னர் மேலும் ஆராய்ந்து மற்றப் பிராஃமி எழுத்துக்களின் ஒலியையும் கண்டறிந்தார். இவ்வாறு மறைந்து மறக்கப்பட்டுக் கிடந்த பிராஃமி எழுத்துக்களைப் படிப்பதற்குத் திறவுகோல் கண்டுபிடிக்கப்பட்ட படியால், பிராஃமி எழுத்துச் சாசனங்கள் வாசித்துப் பொருள் அறியப் பட்டன. பிறகு இவ்வாறே கரோஷ்டி எழுத்தும் வாசிக்கப்பட்டன. இவ்வாறு அறிஞர்கள் ஊக்கத்தோடும் விடா முயற்சியுடனும் முயன்று திறவு கோலைக் கண்டுபிடிக்காம லிருந்தால், இந்தப் பழைய சாசனஎழுத்துக்கள் படிக்கப்படாமலே இருந்திருக்கும். இந்தச் சாசனங்கள் படிக்கப்பட்ட பிறகு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியின் காலத்துச் சரித்திரங்கள் அறியப் படலாயின. நிற்க

அலெக்சாண்டர் கன்னிங்காம்" அவர்கள், இந்திய அரசாங் கத்தில் உத்தியோகஸ்தராக இருந்தவர். இவர் தனிப்பட்ட முறையில், இந்தியப் பழம்பொருள் ஆராய்ச்சியையும் பழைய நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் தமது பொழுது போக்காகக் கொண்டிருந் தார். இவர் 1848-ஆம் ஆண்டில் கல்கத்தா சங்கத்தின்திங்கள் இதழில் இந்தியாவில் ஆர்க்கியாலாஜி துறையை ஏற்படுத்துவது பற்றிக் கட்டுரை எழுதினார், அந்தக் கட்டுரையில், இந்தியதேசக் கலை, பண்பாடு, மதம் முதலியவற்றை அறிந்து சாசன ஆராய்ச்சி, பழைய நாணய ஆராய்ச்சி முதலியவற்றில் தேர்ச்சியுள்ள ஒருவரைப் பழைய கட்டடச் சின்னங்களைப் பாதுகாக்கும் உத்தியோகஸ்தராக நியமிக்க வேண்டும் என்று அவர் எழுதியிருந்தார். ஆனால், அக்காலத்திலிருந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசாங்கம் இவருடைய யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.

பிறகு, கம்பெனி ஆட்சியிலிருந்து இந்திய தேசஅரசாட்சி, இங்கிலாந்து தேசத்து மன்னர் ஆட்சிக்கு மாற்றப்பட்டபோது, கானிங்கு பிரபு இந்தியா தேசத்தின் முதலாவது அரசப் பிரதிநிதியாக வந்தார். அவர், சில அறிஞர்களின் வேண்டுகோளுக் கிணங்கி, வட இந்தியாவுக்கு மட்டும் ஆர்க்கியாலஜி இலாகாவை ஏற்படுத்தினார். ஆகவே, அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்கள் இந்த இலாகாவின் உத்தியோகஸ்தராக 1862-ஆம் ஆண்டில், ‘ஆர்க்கியாலஜி சர்வேயர்’ ஆக நியமிக்கப்பட்டார். இவர் நான்கு ஆண்டு இந்த உத்தியோகத்தில் இருந்தார். பிறகு 1866-ஆம் ஆண்டு இந்த இலாகா மூடப்பட்டது.