உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

103

அச்சுப்புத்தகங்கள் கிடையா. இவ்வித இடையூறு களோடு ஸீகன்பால்கு ஐயர் தமிழ் கற்கத் தொடங்கினார். இவர் தமிழ் படித்தது விந்தையானது.

அக்காலத்தில், தரங்கம்பாடிக்கு அடுத்த சிறுகிராமத்தில், எல்லப்ப உபாத்தியார் என்னும் ஒருவர் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து நடத்திவந்தார். இவர் தேர்ந்த வித்துவானல்லர்; சிறு பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லக்கூடிய சாதாரணப் படிப்புள்ளவர். வேறு தேர்ந்த உபாத்தியாயர் கிடைக்காதபடியால், ஸீகன்பால்கு ஐயர் இந்த உபாத்தியாயரைக் கண்டு பேசித் தமக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்ட தோடு, ஒட்டுத் திண்ணையிற் பாடசாலையை நடத்தவேண்டுவதில்லை என்பதாகவும், தமது வீட்டில் ஒரு பெரிய அறையிற் பாடசாலையை நடத்திக் கொள்ளத் தாம் இடங்கொடுப்பதாகவும், அங்குப் பாடசாலையை நடத்திக் கொள்ளும்படியாகவும் சொன்னார். உபாத்தியாயர் இவரது விருப்பத்துக்கு இணங்கி, ஸீகன்பால்கு ஐயர் வீட்டில் தமது பாடசாலையை ஏற்படுத்திக்கொண்டார். ஸீகன்பால்கு ஐயர் இந்தப் பாடசாலையிற் சேர்ந்து பாடசாலைச் சிறுவரோடு தாமும் தரையிற் கால்களை மடக்கி உட்கார்ந்து, மணலைப் பரப்பி, விரலினால் அ, ஆ, இ, ஈ எழுதக் கற்றுக் கொண்டார். இவ்விதம் இவர் தமிழ் நெடுங் கணக்கைக் கற்றுக் கொண்டபிறகு, பனையோலைகளில் எழுதப்பட்ட பாடங்களைப் படிக்கத்தொடங்கினார். இவ்வாறு தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டு, எட்டுமாதத்திற்குப் பிறகு கிறித்தவ மதத்தைப்பற்றிச் சொற்பொழிவு செய்யத் தொடங்கினார். ஓலைச் சுவடிகள் பலவற்றைச் சேர்த்துத் தொகுத்து ஒரு தமிழ்நூல் நிலையத்தை ஏற்படுத்திக் கொண்டு, நாள்தோறும், அச்சுவடிகளைப் படிப்பதிலும், பிறரைப் படிக்கச்சொல்லிக் கேட்பதிலும் காலங்கழித்து வந்தார். ஆனால் இவர் வீரமாமுனிவரைப்போல சிறந்த தமிழ்ப் புலவராக முடியவில்லை. ஏனென்றால், இவர் தமிழைத் துறைபோகக் கற்கவேண்டும் என்று ஆர்வங் கொண்டிருந்தபோதிலும், தேர்ந்த ஆசிரியர் இவருக்கு வாய்த்திலர்.

புரொட்டஸ்டண்டு கிறித்தவமதத்தை முதன்முதல் தமிழ்நாட்டிற் போதித்த முதல் மிசனரி இவரே. தரங்கம்பாடியிற் கோயில்களைக் கட்டியும், அநேகரைக் கிறித்தவ மதத்திற்சேர்த்தும், சிறுவர் சிறுமிகளுக்குப் பாடசாலைகளை நிறுவியும், மதபோதனைகளைச் செய்தும், கிறித்துவமத நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிற் பதிப்பித்தும் இவர் மதஊழியம் செய்துவந்தார்.