உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -17

66

எழுதும் ஆற்றலை இழந்துவிட்டனர். தமிழரின் இக் குறைபாட்டினைப் பற்றி ஐரோப்பியர் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். “தமிழில் உரைநடை எழுதும் பழக்கம் இன்னும் துவக்கநிலையில் இருக்கிறது. விரைவாகவும் சரமாரியாகவும் தமிழிற் கவிபாடக்கூடிய புலவர்கள் உரைநடையிற் சில சொற்றொடர்கள் எழுதத் தெரியாமலிருக்கின்றனர், என்னும் கருத்துப்பட உவின்ஸ்லோ தமிழ்-இங்கிலீஷ் அகராதியின் முகவுரையில் எழுதப்பட்டிருக்கிறது. "மருத்துவம், கணிதம், லக்கணம், நிகண்டு முதலிய எல்லா நூல்களும் (அவற்றின் உரைகளைத் தவிர) செய்யுளிலே இயற்றப்பட்டிருக்கின்றன. உரை நடையில் நூல் இயற்றும் வழக்கம் ஐரோப்பியரின் தொடர்பால் ஏற்பட்டதாகும்” என்று தமிழைப்பற்றி மர்டாக் துரை எழுதியிருக்கிறார். இவை உண்மையே, தமிழில் மட்டுமன்று; எல்லா இந்திய மொழி களிலும் உரைநடை வளர்ச்சியடைந்தது. ஐரோப்பியரின் தொடர் புண்டான பிறகுதான் என்பதிற் சற்றேனும் ஐயமில்லை.

தமிழில் தனி உரைநடை நூல் ஐரோப்பியரால் முதல் முதல் உண்டாக்கப்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. எப்போது யாரால், என்ன உரைநடை நூல் முதல் முதல் உண்டாக்கப்பட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பதினெட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியில், தமிழ்நாட்டில் வந்து வாழ்ந்திருந்த இத்தாலி தேசத்தவரான பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் தாம் தமிழில் முதன்முதல் உரைநடைநூல் இயற்றினவர் என்பது பெரும் பான்மை யோர் கருத்து. பெரும்பான்மையோர் கருத்து என்றாலும், இது தவறான முடிபாகும். வீரமாமுனிவருக்கு முன்னரே, பதினேழாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டில் வந்து வாழ்ந்திருந்த இத்தாலிய தேசத்தவரான இராபர்ட் நொபிலி என்னும் தத்துவபோதக சுவாமி பல உரைநடை நூல்களைத் தமிழில் இயற்றியிருக்கிறார். வீரமாமுனிவரைப்பற்றித் தெரிந்திருப்பது போல, தத்துவபோதக சுவாமியைப்பற்றிப் பலருக்குத் தெரியாது. வீரமாமுனிவருக்கு முன்னரே இவர் தமிழ் உரைநடை நூல்கள் இயற்றியிருக்கிறார். என்றாலும், இவரைத் “தமிழ் உரைநூலின் தந்தை என்று சொல்வதற் கில்லை. ஏனென்றால், இவருக்கும் முன்னரே, பதினாறாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை நூல்கள் உண்டாயிருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. கி.பி.1577ஆம் ஆண்டில்தான் தமிழில் முதன் முதல் உரைநடை நூல் உண்டானதாகத் தெரிகிறது. இந்த நூலுக்குக் “கிறித்தவ வேதோபதேசம்" என்பது பெயர். ஏசுவின்

99