உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அச்சுப் புத்தக வரலாறு

ன்றைய உலகம் முன்னேற்றமடைந்து, நாகரிகம் பெற்றுச் சிறந்து விளங்குவதற்குக் காரணமாயிருப்பவைகளுள் அச்சுப் புத்தகமும் ஒன்றாகும். காகிதமும் அச்சுப் பொறியும் ஏற்பட்டு, அச்சுப் புத்தகம் உண்டான பிறகு தான், கல்வி என்னும் அறிவுஒளி நாடெங்கும் பரவ வழியுண்டாயிற்று. அச்சுப் புத்தகம் வருவதற்கு முன்னே பனை ஏடு, பதனிட்ட தோல் முதலிய பொருள்களில் மக்கள் நூல்களை எழுதி வந்தனர். ஓலை முதலியவற்றிற் புத்தகம் எழுதுவது கடினமான காரியம். ஒரு புத்தகம் எழுதி முடிப்பதற்குத் தேக உழைப்பு ஒருபுற மிருக்க, காலத்தையும் பொருளையும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டி யிருந்தது. ஆகையால், பண்டைக் காலத்தில், பொருள் உள்ளவர் மட்டும் புத்தகம் பெற்று அறிவை அடைய வசதியிருந்தது; ஏனைய பெருந்தொகையரான ஏழை மக்கள் புத்தகம் வாங்க வசதியில்லாமலே யிருந்தனர். இக் காரணத்தினால், அச்சுப் புத்தகம் வருவதற்கு முன்னே, கல்வி என்னும் சுடரொளி, புத்தகம் பெற வசதியுள்ள சிறுபான்மை யோரிடத்தில்,--மிகமிகக் குறைவான ஒரு சிலரிடத்தில் மட்டும், மின்மினிபோல ஒளிவிட்டுக் கொண்டிருந்த தேயன்றி, நாட்டி லுள்ள எல்லா மக்களிடத்திலும் அவ்வறிவொளி பரவ வசதியில்லாமலே இருந்தது. அச்சுப்பொறி வந்த பிறகு, குறைந்த செலவில், சிறு உழைப்பில், குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்படுவதால், தோட்டி முதல் தொண்டைமான் வரையில், நாட்டுமக்கள் அனைவரும் புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கிப்படித்து, அறிவைப்பெற உதவியாயிருக்கிறது. தேச மக்களின் உள்ளத்திற் படிந்திருந்த கல்லாமை என்னும் காரிருட் படலம், அச்சுப் புத்தகம் வந்த பிறகு, சூரியனைக் கண்ட பனிபோல் மறையத் தொடங் கிற்று. பொதுமக்களுக்கும் புத்தகம் வாங்க வசதி ஏற்பட்ட பிறகுதான், கல்வி கற்று மேன்மேலும் அறிவைப் பெருக்க வேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று. அச்சுப் புத்தகம் வந்ததனால் பொதுவாக உலகத்தில் ஏற்பட்ட மாறுதல் இதுவே.