உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நோய்களின் பெயர்கள்

சில பிராணிகளின் பெயர்கள் சில நோய்களுக்குப் பெயராக அமைந்திருப்பதைக் காணும்போது விநோதமாகத் தோன்றுகிறது. அந்த நோய்க்கும் அந்தப் பிராணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லையானாலும் வெளித்தோற்றத்தில் இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளதுபோலக் காணப்படுகின்றன. ஆனால், கூர்ந்து பார்க்கும்போது அந்த நோய்க்கும் அந்தப் பிராணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட நோய்கள் சிலவற்றின் பெயரை ஆராய்வோம்.

1. தேரை மோந்த தேங்காய்

தேங்காய்கள் சிலவற்றில் ஒருவித நோய் காணப்படுகின்றது. இந்த நோய் கொண்ட தேங்காய்க்குத் தேரை மோந்த தேங்காய் என்று பெயர் கூறுகிறார்கள். தேரை என்பது தவளை இனத்தைத் சேர்ந்த சிறு பிராணி. இந்தத் தேரை, தென்னை மரத்தின் உச்சியில் காய்க்கும் தேங்காயை முகர்வது இல்லை; அதனால் அந்தத் தேங்காய்க்கு அந்த நோய் உண்டாவதில்லை. இயற்கையாகவே வேறு எந்தக் காரணத்தி னாலோ சில தேங்காய்களுக்கு அவ்வித நோய் உண்டாகிறது. ஆனால் அந்த நோய்க்குத் தேரை என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தேங்காயின் நோய்க்கும் தேரைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாவிட்டாலும் எப்படியோ தேரையின் பெயர் அந்நோய்க்குச் சூட்டப்பட்டது.இதனாலே தான் "தேரையார் தெங்கிளநீர் உண்ணாப் பழிசுமப்பர்” என்ற பழமொழியும் உண்டாயிற்று

சீவக சிந்தாமணி, குணமாலையார் இலம்பகம் 174-ஆம் செய்யுளில் வரும் “வேழமுண்ட வெள்ளி” என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “வேழம் தேரை போயிற்றென்றாற் போல்வதொரு நோயென்க” என்று எழுதியிருப்பதை நோக்குக.

அன்னையுங் கோல்கொண் டலைக்கும் அயலாரும்

என்னை அழியுஞ்சொற் சொல்லுவர் - நுண்ணிலைய தெங்கண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் திறத்து