உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுதை ஏர் உழவர்*

கழுதை ஏர் உழவர் என்றால், கழுதை பூட்டிய ஏரை உழுகிறவர் என்பது பொருள். இவ்வாறு கழுதையினால் ஏரை உழுகிறவர் நிலத்தைப் பயிர் செய்யும் குடியானவர் அல்லர். நமது நாட்டுக் குடியானவர் எருமைக் கடாக்களையும், எருதுகளையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுவது மரபு. கழுதை பூட்டிய ஏரை உழுவது, நமது நாட்டில், பண்டைக் காலத்து அரசர் கைக்கொண்டிருந்த வழக்கம். பகை அரசனுடைய கோட்டையைப் போரில் வென்று அதனைக் கைப்பற்றிய அரசன், வெற்றிகொண்ட பின்னரும் தனது சினம் தணியாதவனாயின், தான் கைப்பற்றிய கோட்டையில் உள்ள அரண்மனைகளை இடித்துச் சிதைத்துத் தரையைக் கழுதை பூட்டிய ஏரினால் உழுது கொள்ளையும் வெள்வரகையும் விதைப்பான். இவ்வாறு செய்வது தோல்வியுற்ற பகையரசரை இகழ்ந்த செயலாகும். பகையரசர் நகரத்திலே கழுதை ஏர் உழுகிற இச்செய்தி, புறப்பொருள் இலக்கணத்திலே உழிஞைப் படலத்தின் ஒரு துறையாகக் கூறப்படுகிறது. பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலே இத்துறை கூறப்படவில்லை. ஆயினும், கடைச் சங்க காலத்திற்குப் பிற்பட்டதாகிய, (கி.பி. 300-க்குப் பிற்பட்ட தாகிய) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலே, உழிஞைப் படலத்தின் இருபத்தொன்பது துறைகளில் ஒன்றாக இத்துறை கூறப் பட்டுள்ளது. (புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் என்னும் நூலுக்குப் பிறகு இயற்றப்பட்டதாகும். பன்னிருபடலம் சுமார் கி.பி. 7- ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது) புறப்பொருள் வெண்பா மாலையிலே உழிஞைப் படலத்திலே இத்துறைச் செய்தி இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உழுதுவித்திடுதல்

எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித் துண்ணா வரகொடு கொள்வித் தின்று.

உரை:பகைவருடைய பல அரணும் கழுதையாகிய ஏரிட்டுழுது சுவடியுடன் குடைவேலை விதைத்தது என்றவாறு.

  • செந்தமிழ்ச்செல்வி, 23:1,1948.