உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சிறைத்தும்பி

(சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்) மாடு

பசுவுக்கும் எருதுக்கும் பொதுவாக வழங்கும் பெயர் மாடு என்பது. ஆனால், மாடுகளைப்பற்றிய ஆராய்ச்சி அன்று இந்தக் கட்டுரை. மாடு என்னும் சொல்லைப் பற்றித்தான் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகிறது. மாடு என்பதற்குச் செல்வம் என்னும் வேறு பொருளும் உண்டு. மாடு என்னும் சொல் எப்படிச் செல்வம் என்னும் பொருள் பெற்றது என்பதை ஆராய்வோம்.

மிகமிகப் பழைய காலத்தில் பசு மந்தைகளையும் எருது மந்தைகளையும் அதிகமாகப் பெற்றிருந்தவன் செல்வம் உள்ளவ னாகக் கருதப்பட்டான். மாட்டு மந்தைகளை எவ்வளவு அதிகமாகப் பெற்றிருந்தானோ அவ்வளவு பெருஞ் செல்வமுள்ளவனாக அக் காலத்து மனிதன் கருதப்பட்டான். அப்பொழுது “மாடு” என்னும் சொல்லுக்குப் புதிய பொருள் உண்டாயிற்று. அதாவது, மாடு என்னும் சொல்லுக்குச் செல்வம், பொருள் என்னும் புதிய பொருள் ஏற்பட்டது.

மக்கள் அதிக நாகரிகம் பெறாத அந்தக் காலத்தில் பண்ட மாற்றுச் செய்து வாழ்ந்தார்கள். பண்டமாற்று என்பது நெல், கேழ்வரகு, பயறு, உப்பு, மிளகு முதலிய பொருள்களைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய வேறு பொருள்களைப் பெற்றுக் கொள்வது. செம்பு, வெள்ளி, பொன் நாணயங்கள் அக்காலத்தில் வழங்கப்படாதபடியினால், மனிதர் பண்டமாற்றுச் செய்து வாழ்ந்தார்கள். அதிக விலையுள்ள நிலபுலம் போன்றவைகளை வாங்குவதற்கு அக்காலத்தில் பண்டமாற்றாக இருந்தவை மாடுகள் ஆகும். ஆகவே, அக்காலத்தவர் மாடுகளை- பசுவையும் – எருதையும் - செல்வம் போலத் தேடி வைத்தனர். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் இருந்ததென்று கருதவேண்டா. அக்காலத்தில் உலக முழுவதும், மாடு செல்வப் பொருளாகக் கருதப்பட்டு எல்லோராலும் தேடி வைக்கப்பட்டது.