உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

21

அக்காலத்தில் மாடு இல்லாதவன் செல்வம் இல்லாதவனாகக் கருதப்பட்டான். மாடு உள்ளவன் செல்வமுள்ளவனாகக் கருதப் பட்டான். எவ்வளவு அதிகமாக மாடுகளைப் பெற்றிருந்தானோ அவ்வளவு அதிகச் செல்வமுள்ளவனாகக் கருதப்பட்டான். இவ்வாறு, பசுவுக்கும் எருதுக்கும் பொதுப் பெயராக வழங்கிய மாடு என்னுஞ் சொல், காலப் போக்கில் செல்வம் என்னும் புதிய பொருளைப் பெற்றது. ஆகவே, பண்டைக்காலத்தில் பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் மாடு என்னும் சொல் செல்வம் என்னும் பொருளில் வழங்கப்பட்டது.

பின்னர், மக்கள் நாகரிகம் பெற்றுப் பொன், வெள்ளி, செம்புக் காசுகளை நாணயமாக வழங்கக் கற்றுக்கொண்ட பிறகு, பண்டமாற்று வழக்கம் மறைந்து, நாணயமாற்று வழக்கம் ஏற்பட்டது. மக்கள் பொருள்களை நாணயங்கொடுத்து வாங்கினார்கள். அதிக விலை மதிப்புள்ள பொருள்களை வாங்குவதற்குப் பண்டமாற்றுப் பொருளாகப் பயன்பட்ட மாட்டுக்குப் பதிலாகப் பொன் நாணயம் வழங்கப்பட்டது. பொன் நாணயம் வழங்கப்படவே, செல்வப் பொருளாக மாடுகளைச் சம்பாதித்து வைக்கும் வழக்கம் மறைந்து, அவற்றிற்குப் பதில் பொன்னைத் தேடிவைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அப்போது, பால், தயிர், வெண்ணெய்க்காகப் பசுவும், ஏர் உழுதல் வண்டி இழுத்தல் முதலிய வேலைகளைச் செய்வதற்காக எருதும் பயன்படுத்தப் பட்டதல்லாமல் செல்வப் பொருளாகக் கருதி, மாடுகளைச் சேர்த்து வைக்கும் வழக்கம் மறைந்துவிட்டது. நாணயம் ஏற்பட்ட பிறகு, மாடு பண்டமாற்றுப் பொருளாகக் கருதப்படாமற் போனாலும், மாடு என்னும் பெயர் மட்டும் மறையாமல், செல்வம் என்னும் பொருளில் மாடு என்னுஞ் சொல்மட்டும் வழங்கி வந்தது. அதாவது மாடு என்னுஞ்சொல் செல்வம் என்னும் அர்த்தத்தைப் பெற்ற பிறகு, நிலபுலம் வீடுவாசல் தோட்டந்துறவு முதலிய செல்வத்திற்கு ஈடாக மதிக்கப்படும் பொருள்களும், அப் பொருள்களைப் பெறுவதற்கு ஆதாரமாக உள்ள பொன்னும் மாடு என்று பெயர் பெற்றன.

செல்வத்தை மாடு என்று வழங்கியதைப் பழைய இலக்கி யங்களில் காண்கிறோம். அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.