உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணிக்கு அஞ்சலி*

நம்முடைய தலைமுறையில் வாழ்ந்த கவிஞர் பெருமக்களில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களும் ஒருவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். அவர் தேசிய இயக்கத்தில் சார்ந்திருந்தபடியாலும் தேசிய சம்பந்த மான பாடல்களைப் பாடினமையாலும் அவரைத் தேசிய விநாயகம்பிள்ளை என்றும் கூறுவதும் உண்டு. கவிமணி அவர்கள் தமிழ்க் கவிதைகளைப் பாடித் தமிழ் இலக்கியத்தை வளர்த்தார்கள். அவருடைய செய்யுட்கள் அழகு இனிமை உண்மை தெளிவு முதலிய நற்பண்புகள் பெற்று மிளிர்கின்றன. கவிமணி என்னும் சிறப்புப் பெயர் அவருக்குச் சாலப் பொருந்தும். அவர்கள் இயற்றிய பாடல்கள் பலவகைப்பட்டவை. சிறுவர் முதல் முதியவர் வரையில் எல்லோருக்கும் அவர் கவிதை இயற்றினார். சமரச நோக்குடைய அவர் எல்லா மதங்களையும் போற்றினார். அவர் வாழ்ந்த காலம் தேசிய இயக்கக்காலம். மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரை நடத்தின காலம். சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு முதலான சீர்திருத்தங்கள் நடைபெற்ற காலம். உலக மகாயுத்தங்கள் நடந்த காலம். இவற்றின் சாயல்கள் கவிமணியினுடைய சில கவிதைகளில் காணப்படுகின்றன. கவிமணி அவர்கள் ஆங்கிலம் பயின்றவர்கள். ஆங்கில மொழிச் செய்யுட்களை அறிந்த அவர் அம்முறையில் தமிழ்ச் செய்யுட்களைப் பாடியுள்ளார்.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்த புலவர்கள். சுதந்திரப் போராட்டம் நடந்த அக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் சுப்பிரமணிய பாரதியாரின் தேசியப் பாடல்கள் பாடப்படுவதுண்டு. அந்தப் பாடல்கள் மக்களுக்கு உணர்ச்சியையூட்டின. கவிமணி அவர்கள் பாரதியின் பாடல்களைப் பாராட்டினார். பாராட்டினது மட்டு மன்று, மனமாரப் புகழ்ந்து மகிழ்ந்தார். பாம்பின் கால் பாம்பறியும் என்பது பழமொழி. கவிஞரின் கவிதைகளைக் கவிஞரே நன்கறிவார்கள். *கவிமணிதேவி, மலர். 1975.