உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

“பாரதி பாடலும் பட்டிக் காட்டானும்” என்னும் செய்யுளில் கவிமணி அவர்கள் பாரதியின் பாடல்களைப் புகழ்ந்து பாடுவது இனிமையாக இருக்கிறது.

-

பாட்டுக் கொருபுலவன் பாரதியடா அவன்

பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா - அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா

என்று தொடங்கிப் பாரதியின் கவிதைகளின் சிறப்பைப் பாடி மகிழ்கிறார் கவிமணி. பாரதியின் 'கரும்புத் தோட்டம்', 'செந்தமிழ் நாடு’, ‘பாப்பாப் பாட்டு', ‘பாஞ்சாலி சபதம்”, “வந்தே மாதரம்”, “எங்கள் நாடு’, ‘சின்னஞ்சிறு கிளி', ‘கண்ணன் காதலன்’, 'குயிற்பாட்டு', சுதந்திரப் பாட்டு', 'தொண்டு செய்யுமடிமை' முதலான பாரதியின் பாட்டுக்களைக் கவிமணி பாராட்டிப் பாடுகிறார்.

'ஓர் ஏழையின் பிரார்த்தனை' என்னும் செய்யுளிலே கவிமணி அவர்கள், ஐரோப்பா கண்டத்தில் மூண்ட இரண்டாம் உலகப் போரினால் ஏனைய நாடுகள் அடைந்த துன்பங்களையும் துயரங்களை யும் பாடுகிறார். சிங்கப்பூரையும், பர்மாவையும் ஜப்பான் பிடித்துக் கொண்டதையும் உலகத்தில் பஞ்சமும் பட்டினியும் பரவினதையும் தேசியத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதையும் மற்றும் போர்க்காலத்து இன்னல்களை யெல்லாம் கூறுகிறார். ‘தீண்டாதார் விண்ணப்பம்', 'தீண்டாமைப் பேய்', 'காங்கிரஸ் கப்பல்', 'கதர் விற்பனை', 'வட்டமேசை மகாநாடு' போன்ற இவருடைய கவிதைகள் இவர் காலத்தில் நமது நாட்டில் இருந்த முக்கியமான பிரச்சனைகள்.

இயேசு கிறிஸ்து, புத்தர் பெருமான், மீராபாய் போன்ற பெரியவர்களைப் பற்றிக் கவிமணி அவர்கள் பாடியுள்ளார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி 'இரக்ஷகர்' என்னும் செய்யுளிலும், புத்தரின் வரலாற்றில் ஒரு பகுதியைச் ‘சித்தார்த்தர் கேட்ட தேவகீதம்’ என்னும் செய்யுளிலும் மீராபாய் வரலாற்றை அன்பின் வெற்றி என்னும் செய்யுளிலும் பாடியுள்ளார். எட்வின் அர்னால்டு என்னும் ஆங்கிலக் கவிஞர் புத்தர் பெருமானின் அழகான வரலாற்றை ஆங்கிலமொழியில் 'லைட் ஆப் ஏசியா' என்னும் பெயருள்ள கவிதையாக எழுதியுள்ளார். அந்தக் கவிதை நூலைப் பின்பற்றிக் கவிமணி அவர்கள் 'ஆசிய ஜோதி' என்னும் கவிதை நூலை அழகாகப் பாடியுள்ளார். இச் செய்யுட்கள் இனிமையாக உள்ளன.