உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று பொருள் கொண்டால் என்ன? அதில் என்ன தவறு என்று கேட்கலாம். அப்பொருளை ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு தடைகள் உள்ளன. அவை:

ஒன்று: இல்லறத்தான் தன்னை உட்பட ஐந்து பேருக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்று இந்தக் குறள் கூறுகிறது. தன்னையும், தன் சுற்றத்தாரையும், விருந்தினரையும், தெய்வத்தையும், (துறவிகளையும்) உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய இல்லறத்தான், இறந்துபோன பிதிரர்களுக்கு எப்படி உணவு காடுத்துக் காப்பாற்ற முடியும்? இறந்துபோன பிதிரர் உணவு உட்கொள்ள மாட்டார்களே. ஆகவே, தென்புலத்தார் என்பவர் இறந்து போன பிதிரர் அல்லர் என்பதும், தென்புலத்தார் என்னும் சொல்லுக்கு வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும் என்பதும், அப்பொருள் இக்காலத்தில் மறைந்துவிட்டது என்பதும் தெரிகின்றன.

இரண்டாவது: தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று பொருள் கொள்வது பொருந்தாது. ஏனென்றால், திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியது, குறிப்பாகச் சிலருக்கு மட்டும் அன்று; உலக மக்கள் எல்லோர்க்கும் - எல்லா நாட்டாருக்கும், எல்லா தேசத்தாருக்கும், எல்லா மதத்தாருக்கும் பயன்பட வேண்டும் என்னும் கருத்தோடு திருக்குறளை இயற்றினார். அப்படிப்பட்ட உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் ஒரு சிறு கூட்டத்தாரின் வழக்கமாகிய பிதிரர்களுக்குப் பிண்டங் கொடுப்பதைத் தமது திருக்குறளில் கூறினார் என்பது பொருந்தாது. இறந்து போன பிதிரர்களுக்குப் பிண்டம் கொடுக்கும் வழக்கம் இந்துக்களிலும் சிலரிடத்தில் மட்டுங் காணப்படுகிறது. மற்ற மதத்தாரிடம் காணப்படவில்லை. ஆகவே தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று பொருள் கூறுவது, பிண்டம் கொடுக்கும் வழக்கமுள்ள சிலர் கருத்துக்குப் பொருத்தமாகத் தோன்றலாமே தவிர, மற்றைப் பெரும்பான்மையோருக்குப் பொருந்தாது. அன்றியும் பிண்டங் கொடுப்போரின் பிண்டங்களைப் பிதிரர் வந்து உண்பதும் இல்லை. எனவே, தென்புலத்தார் என்பவர் பிதிரர் என்று கூறப்படுவது ஏற்கத்தக்கதல்ல.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை