உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

உவா) வழங்கப்பட்டது, சொந்தச் சொல்லை மறந்து விட்டு அயல் சொல்லை வழங்குவது தவறுதான். இச்செய்கை, கையில் உள்ள காசைப் பெட்டியில் வைத்துவிட்டு அயலவனிடம் காசைக் கடன் வாங்கிச் செலவு செய்வது போலாகும். கையில் காசு இருக்கும்போது அக் காசைப் பயன்படுத் தாமல் அயலவனிடம் காசு கடன் வாங்கிச் செலவு செய்பவன் அறிஞர் ஆவானா?

பண்டைக்காலத்தில் உவா என்னுஞ் சொல் நூல் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருந்துவந்தது. பழைய நூல்களிலே இச்சொல் வழங்கப்பட்டதை இங்கு ஆராய்வோம்.

ஓவாது இரண்டுவாவும் அட்டமியும் பட்டினிவிட்டு

ஒழுக்கங் காத்தல்

தாவாத தவம் என்றார் 1

இதில் துறவிகள் பட்டினி நோன்பு நோற்க வேண்டிய நாட்கள் கூறப்படுகின்றன. அவற்றில் காருவாவும் வெள்ளுவாவும் இரண்டுவா என்று கூறப்பட்டது காண்க.

சிலப்பதிகாரம், 15-ஆம் காதை, 164-ஆம் அடியில் வரும், “பட்டினி நோன்பிகள்” என்பதற்கு “இரண்டு உவாவும் அட்டமியும் முட்டுப் பாடும் பட்டினிவிட் டுண்ணும் விரதிகள்” என்று அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறார். இவ்வுரையில் உவா என்னும் சொல்லைக் கூறியிருக்கிறார்.

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

என்பது புறநானூறு, மூன்றாம் செய்யுளின் முதல் அடி. முழுநிலா வட்டம் போன்று அரசனுடைய வெண் கொற்றக்குடை இருக்கிறது என்று கூறுகிற இது, முழு நிலாவை உவாவுமதி என்று கூறுகிறது. இதன் பழைய உரையும், “உவாநாள் மதியினது வடிவுபோலும் வடிவினை யுடைய உயர்ந்த வெண்கொற்றக் குடை” என்று கூறுகிறது.

புறநானூநு, 60-ஆம் செய்யுளடியாகிய, உச்சி நின்ற உவாமதி என்பதற்கு, “விசும்பினது உச்சிக் கண்ணே நின்ற உவாநாள் மதியம்” என்று பழைய உரை கூறுகிறது.

நிறைமதி நாளாகிய உவா நாளில், கிழக்கே முழுநிலா வெளிப்பட மேற்கே பகலவன் மறைகிறதைப் புறநானூற்றுச் செய்யுள் இவ்வாறு கூறுகிறது: