உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோன்

சான்றோன், சான்றோர் என்னும் சொல்லுக்குப் பொரு ளென்ன? சான்றோர் என்றால், சால்புள்ளவர், நல்லொழுக்கம் உடையவர், அறிஞர், கல்வி கேள்விகளில் உயர்ந்தவர் என்று பொருள் கூறுவீர்கள். ஆம்; இந்தச் சொல்லுக்கு இந்தப்பொருளும் உண்டு. ஆனால் பண்டைக் காலத்தில் இச்சொல்லுக்கு வேறு பொருளும் இருந்தது. சான்றோன் என்றால் போர்வீரன் என்றும் பொருள் உண்டு. வீரனுக்குச் சான்றோன் என்னும் பெயர் உண்டென்று கூறினால், வியப்பாகத் தான் இருக்கும். போர்வீரர்களைச் சான்றோர் என்று வழங்கியதைப் பழந்தமிழ் நூல்களில் காணலாம். அதனை இங்கு ஆராய்வோம்.

பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்தில், இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் பாடுகிறார். அதில், அவ்வரசனை அவர்,

எழுமுடி கெழீ இய திருஞெமர் அகலத்து

நோன்புரித் தடக்கை சான்றோர் மெய்ம்மறை

என்று கூறுகிறார்.

இதன் பொருள்: ஏழு அரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் அணிந்த பொன் மகுடங்களைக் கொண்டு மாலை செய்து, அதனைத் திருமகள் வாழ்கின்ற பரந்த மார்பிலே அணிந்த வலி பொருந்திய பெரிய கைகளையுடைய, போர்க்களத்திலே போர் வீரர்களின் (சான்றோரின்) முன்பாகக் கவசம்போல நிற்பவன் என்பது. இதில் சான்றோர் என்பதற்கு வீரர் என்று பழைய உரையாசிரியர் உரை கூறுகிறார். ஈண்டுச் சான்றோர் என்பது போரில் அமைதியுடைய வீரரை என்று அவர் விளக்கங் கூறுகிறார். இதனால், சான்றோர் என்னும் சொல்லுக்குப் போர்வீரர் என்னும் பொருளும் உண்டு என்பது தெரிகிறது.

பதிற்றுப்பத்து, ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் அரசனைக் காக்கைபாடினியார் என்னும் புலவர்,