உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

குடியில் பிறந்த வீரமகள் ஒருத்தித் தன் மகனுடைய போர்க் கடமையைப் பற்றி இச்செய்யுளில் கூறுகிறாள். சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொண்டால், இச்செய்யுளின் செம்பொருள் இனிது விளங்கும். இச்செய்யுளின் கருத்து இது:

“வீரக்குடியில் பிறந்த நான் வீரமகனைப் பெற்று வளர்க்க வேண்டியது எனது கடமையாகும். அந்த மகனைச் சான்றோன் (வீரன்) ஆக்குதல் அவனுடைய தந்தையின் கடமையாகும். வேல் வாள் முதலிய படைக்கலங்களைச் சய்து கொடுக்கவேண்டியது கருமானுடைய கடமை. நல்ல நடைகளை (போர்முறைகளை) கற்பிக்க வேண்டியது அரசனுடைய கடமை. அதாவது, போர்ப் பயிற்சியை அளிப்பது அரசனுடைய கடமையாகும். போர்க் களத்தில் சென்று பகைவர் சேனையுடன் போர்செய்து வெற்றியுடன் திரும்பி வருவது, அதிலும் யானைப்படையுடன் போர் செய்து வெற்றி பெற்றுத் திரும்புவது, சான்றோனுடைய (வீரனுடைய) கடமையாகும்.”

சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொண்டால், இச்செய்யுளுக்குச் சரியான செம்பொருள் கிடைக்கக் காண்கிறோம். அப்படிக் கொள்ளாமல் சான்றோனுக்கு அறிஞன் என்று பொருள் கொண்டால், இச்செய்யுளுக்குச் சரியான கருத்து விளங்காமல் டர்ப்பட வேண்டியிருப்பதைக் கண்டு தெளிக.

இனி, திருக்குறளின் செய்யுளை ஆராய்வோம்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்

என்பது அக்குறள். இதில் உள்ள சான்றோன் என்னும் சொல்லின் பொருள் என்ன? அறிஞன் என்று பொருள் கொள்வதா, வீரன் என்று பொருள் கொள்வதா? இங்கு எந்தப் பொருள் பொருத்தமானது?

"

இங்குச் சான்றோன் என்னும் சொல்லுக்கு வீரன் என்று பொருள் கொள்ளாமல், அறிஞன் என்று பொருள் கொள்ளுகிறார்கள் இக் காலத்தவர். உரையாசிரியர்களும் அறிஞன் என்றே உரை கூறிச் சென்றார்கள். பரிமேலழகர் இத்திருக்குறளுக்கு இவ்வாறு உரை கூறி யிருக்கிறார். அவ்வுரை இது: