உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

அறிந்தேன். திருப்பாவடை என்னும் இனிப்புப் பலகாரம் தில்லை நடராசப் பெருமானுக்கும், திருவரங்கம் அரங்கநாதருக்கும் தொன்று தொட்டு நிவேதம் செய்யப்பட்டு வரும் ஒரு சிறந்த பலகாரம் என்பது தெரிகிறது.

திருப்பாவாடை செய்வதற்குத் துய்யநெய் புத்துருக்கு நெய் கற்கண்டு சீனி சர்க்கரை முதலிய பொருள்கள் வேண்டும் என்று ஸ்ரீரங்க மகத்துவம் கூறுகிறது. பழஅரிசி மணிப்பருப்பு சர்க்கரை தேங்காய் பலாப்பழம் முதலிய பொருள்களைக் கொண்டு திருப் பாவடை செய்யவேண்டுமென்று தில்லைச் சாசனம் கூறுகிறது. இவ் விரண்டையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் திருப்பாவடை என்பது சர்க்கரைப் பொங்கலைவிட மிக உயர்ந்ததான, இனிப்பும் சுவையும் மிகுந்த 'கமகம வென்று பரிமளிக்கிற" பலகாரம் என்பது நன்கு தெரிகிறது. சாப்பிட்டால் மிகச் சுவையுள்ளதாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை. ஆனால், பாவடை என்று ஏன் பெயர் வந்தது? பாவடை என்றால் பொருள் என்ன என்னும் ஐயம் தோன்றிவிட்டது.

தலைவலி போய் திருகுவலி வந்தது என்று பழமொழி கூறுவார்கள். பாவாடையா, பாவடையா என்கிற ஆராய்ச்சியில் நெடுநாள் கழிந்து, கடைசியில், பாவடை என்பதுதான்-சரியான வாசகம் என்பதும் பாவடை என்பது ஒரு பலகாரத்தின் பெயர் என்பதும் நெடு நாளைக்குப் பிறகு அறிந்துகொண்ட எனக்கு, இப்போது புதிய ஐயம் ஏற்பட்டது. பாவடை, சுவை மிகுந்த இனிப்புப் பலகாரம். சரி, இதற்கு ஏன் பாவடை என்று பெயர் வைத்தார்கள்? காரணப் பெயரா, இடுகுறிப் பெயரா? இந்த ஆராய்ச்சியில் மனம் ஊக்கி விட, மூளை வேலை செய்தது.

பாவடை! பாவடை என்றால் என்ன? அதை எப்படிப் பிரிப்பது? பாவு+அடை = பாவடை. பொருள் இல்லையே! ஓகோ! பாகடையாக இருக்குமோ? பாகு+அடை = பாகடை. சரி, சரி; பொருள் சரியாய் விளங்குகிறது. பாகடை-பாவடை-பாவாடை.

வெல்லம், சர்க்கரை, கற்கண்டு இவற்றை நெய்யுடன் கலந்து பாகு காய்ச்சினால் மிக இனிமையாகவும் கமகமவென்று பரிமளிக்கவும் செய்யும். நெய்யுடன் சர்க்கரையைக் கலந்து பாகு காய்ச்சி, அதனுடன் பருப்பு மாவைக் கலந்து மைசூர்பாகு செய்கிறார்கள் அல்லவா? அதிரசம் செய்வதற்கு அரிசி மாவைக் கலந்து வெல்லப்பாகு