உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடு-கொடு

சொற்கள் எக்காலத்திலும் ஒரே அமைப்பாக இராமல், காலந் தோறும் திரிந்தும் மருவியும் சிதைந்தும் உருமாறிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆதிகாலம் முதல் ஒரே அமைப்பாக வழங்கிவருகிற சொற்கள் சிலவே. பெரும்பாலும் சொற்கள் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. பேசும்போது சொற்களைக் கொச்சையாகப் பேசுவதும், எழுதும்போது திருத்தமாக எழுதுவதும் பெரும்பாலோருக்கு வழக்கமாக இருப்பது, சொற்கள் உருமாறு வதற்குரிய காரணங்களில் ஒன்றாகும். சொற்களைக் கொச்சையாகப் பேசாமல் திருத்தமாகப் பேசுவது சிறந்தது.

திருத்தமாகப் பேசுவது என்றால், தமிழ்ச் சொற்களை நீக்கி வேறு மொழிச் சொற்களைப் பேசுவது என்பது பொருள் அன்று. தண்ணீர் கொடுங்கள் என்பதை ஜலம் கொடுங்கள் என்றும், உணவு உண்டு ஆயிற்றா என்பதை ஆஹாரம் ஆயிற்றா என்றும் இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்குப் பதில் வேறு மொழிச் சொற்களை வழங்குவது, திருத்தமான பேச்சு என்று சிலர் தவறாக நினைத்து அயல்மொழிச் சொற்களை வழங்குகிறார்கள். இது அவர்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறதே தவிர, அவர்கள் திருத்தமாகப் பேசுகிறார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை. நிற்க.

படித்தவர்களுங்கூடப் பெரும்பாலும் பேச்சு வழக்கில் சொற்களைக் கொச்சையாகப் பேசுவதையும், எழுதும் போது திருத்தமாக எழுதுவதையும் காண்கிறோம். கொச்சைச் சொற்கள் என்று கருதப்படுகிற சில சொற்கள் உண்மையில் திருத்தமான சொற்கள் என்று ஆராய்ச்சியினால் தெரிகின்றன. அதாவது, வெளித்தோற்றத்தில் கொச்சையாகக் காணப்படுகிற சில சொற்கள் உண்மையில் திருத்தமான சொற்களாக உள்ளன. அப்படிப்பட்ட சொற்களில், குடு என்பதும் ஒன்று.

நான் குடுத்தேன், அவர் குடுத்தார், நீ குடு என்று பலரும் பேசுவதை நாம் கேட்கிறோம். இந்தக் குடு என்னும் சொல்லைக் கொச்சைச் சொல் என்றும், கொடு என்று கூறுவதுதான் திருத்தமான இலக்கியச்சொல் என்றும் கருதுகிறோம். ஆனால், ஊன்றி ஆராய்ந்து