உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

79

பார்க்கும்போது, குடு என்பதுதான் நூல்வழக்கிலும் பேச்சுவழக்கிலும் பண்டைக் காலத்தில் பயின்று வந்த திருத்தமான சொல் என்பதும், கொடு என்பது பிற்காலத்தில் திரிந்து வழங்கப்படுகிற சொல் என்பதும் தெரிகின்றன. இக்காலத்தில், இதற்கு நேர்மாறாக, கொடு என்பதுதான் திருத்தமான சொல் என்றும், அதைத் தவறான முறையில் கொச்சையாகப் பேசுவது தான் குடு என்னும் சொல் என்றும் பலரும் கருதுகிறார்கள். ஆராய்ச்சியோ இதற்கு மாறான முடிபைக் காட்டுகிறது.

இப்பொழுதுள்ள இலக்கிய நூல்களை எல்லாம் (பழைய இலக்கிய நூல்கள் உள்பட), துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் குடு என்னும் சொல்லைக் காணமுடியாது; கொடு என்னும் சொல்லே நெடுகக் காணப்படுகிறது. இதனால் கொடு என்னும் சொல்லே முற்கால முதல் வழங்கி வருகிற திருத்தமான சொல் என்றும், குடு என்பது கொடு என்பதிலிருந்து திரிந்துவந்த கொச்சைச்சொல் என்றும் முடிவுகட்டுகிறோம். ஆனால், சாசனங்களை ஆராய்ந்து பார்த்தால் குடு என்னும் சொல் நெடுகப் பயின்று வந்திருப்பதையும், கொடு என்னும் சொல் பயிலப்படாம லிருப்பதையும் காண்கிறோம். இது மிக வியப்பான செய்தியல்லவா! இதற்குக் காரணம் என்ன?

தமிழில் அச்சுப் புத்தகங்கள் ஏற்பட்டு ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதை நினைவில் வைக்க வேண்டும். அச்சுப் புத்தகம் வருவதற்கு முன்பு ஏட்டுச்சுவடிகள் இருந்தன. ஏட்டுச் சுவடிகள் பழுதடைந்த போதெல்லாம், அவை புதிய ஏடுகளில் அவ்வப் போது பிரதி எழுதிவைக்கப்பட்டன. அவ்வாறு பிரதி எழுதும்போது, சொற்களின் பழைய உருவத்தை மாற்றிப் புதிய உருவத்தை எழுதி வைத்தார்கள். இது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சியே. "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்” என்னும் பழமொழியும் இருக்கிறதே.

ஆனால், கல்லிலும் செம்பிலும் எழுதப்பட்ட கல் எழுத்துச் சாசனங்களும், செப்பேட்டுச் சாசனங்களும், அவை, எழுதப்பட்ட காலம் முதல் இன்றளவும் ஒரே வாசகமாக உள்ளன. அவை, காலந் தோறும் பெயர்த்தெழுதப்படவில்லை; திருத்தி எழுதப்படவும் இல்லை. (பழைய சாசனங்களைப் பிரதி செய்யப்பட்டால், அவை பிரதி செய்யப் பட்டவை என்பதையும் எழுதிவைப்பது அக்காலத்து வழக்கம். இப்படிப் பிரதி செய்யப்பட்ட சாசனங்கள் மிகமிகச் சில.) எனவே, அச்சுப் பிரதிகளிலும் ஏட்டுப் பிரதிகளிலும் காலத்துக்குக் காலம்