உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

பீப்லாஸ் துறைமுகத்திலிருந்து எகிப்து நாட்டு பேபரைஸ் தாள்களைப் பினீஷியர் கிரேக்க நாடுகளுக்கு ஏராளமாகக் கொண்டுபோய் விற்பனை செய்தார்கள்.

கிரேக்க நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட பேபரைஸ் தாள்கள், பெருவாரியாகப் பீப்லாஸ் துறைமுகப்பட்டினத்திலிருந்து சென்றபடியினாலே, கிரேக்கர்கள் பேபரைஸ் தாள்களுக்குப் பீப்லாஸ் என்று பெயரிட்டழைத்தார்கள். பிப்லாஸ் என்னும் பெயர் பிற்காலத்தில் புத்தகம் என்னும் அர்த்தத்தில் பைபிள் என்று வழங்கப்பட்டது. பிறகு கிறிஸ்து சமயம் பரவிய காலத்தில் கிறிஸ்துவ வேத புத்தகத்திற்குச் சிறப்புப் பெயராக பைபிள் என்னும் பெயர் ஏற்பட்டது.

இவ்வாறு, பீப்லாஸ் துறைமுகப்பட்டினத்தின் பெயர் கடைசியாக ஒரு வேதபுத்தகத்தின் பெயராக மாறி விட்டது.

பேபரைஸ் என்னும் பெயரிலிருந்து தான், இப்போது வழங்கப் படுகிற பேப்பர் என்னும் ஆங்கிலச்சொல் உண்டாயிற்று. பேபரைஸ் என்னும் பட்டையை எழுது கருவியாகக் கிரேக்கர்களும் உரோமர் களுங்கூடக் கையாண்டார்கள். ஆகவே, கிரேக்க மொழியிலும், இலத்தீன் மொழியிலும் பேபரைஸ் என்னும் சொல் இடம்பெற்றிருந்தது. பேபரைஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலேயர் பேப்பர் என்னும் சொல்லைப் பெற்றார்கள். இப்போது நாம் வழங்குகிற காகிதமும் முற்காலத்தில் வழங்கப்பட்ட பேபரைஸும் வெவ்வேறு பொருளாக இருந்த போதிலும் பழைய பேபரைஸின் பெயரே காகிதத்திற்கு இப்போதும் வழங்கப்படுகிறது.

2. மரிசி

பீப்லாஸ் பட்டினத்தின் பெயர் பைபிள் புத்தகத்தின் பெயராக அமைந்தது போலவே, பழந்தமிழ் நாட்டுத் துறைமுகப்பட்டின மாகிய முசிறி என்னும் பட்டினத்தின் பெயர் வடமொழியில் மிளகுக்குப் பெயராக அமைந்துவிட்டது. சமஸ்கிருதம் என்னும் வடமொழியிலே மிளகுக்கு மரிசி என்பது பெயர். முசிறிப் பட்டணத்தின் பெயர் எப்படி மரிசியாக மாறிற்று?

பண்டைக் காலத்திலே சேரநாட்டு மிளகு உலகப் புகழ் பெற்றிருந்தது. அந்தக் காலத்திலே சேரநாடு தமிழ் நாடாக இருந்தது. (தமிழ் பேசப்பட்ட சேரநாடு மலையாளம் பேசும் மலையாள நாடாக