உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

101

சைவ சித்தாந்தத் தத்துவக் கருத்துகளை யெல்லாம் ஒருங்கு அமைத்துச் சிறந்த உருவமாக்கிக் கலையழகு பொருந்த இச்சிற்பத்தை அமைத்துக் கொடுத்த சிற்பி யாவரோ? அவர் பெயர் யாதோ?

2

காளிகா தாண்டவ மூர்த்தத்தின் இன்னொரு சிற்ப உருவமும் கிடைத்திருக்கிறது. இந்த உருவம் பாவநாசம் தாலுகா, களக்காடு என்னும் ஊரில், விருபாட்சீசுவரர் கோவிலில் இருக்கிறது. (படம் 2 காண்க.) இந்தத் தாண்டவ மூர்த்திக்கு நான்கு கைகள் உள்ளன. (திருநல்லூர் தாண்டவ மூர்த்திக்கு எட்டுக் கைகள் உள்ளன)

திருநல்லூர் நடராசரைப்போலவே இந்த நடராசரும் தம்முடைய லதுகையில் ஏந்திய ஏந்திய துடியை அசைத்து ஒலியுண்டாக்கிக் கொண்டிருக்கிறார். இது சிற்பத்தின் அமைப்பிலிருந்து நன்கு தெரிகின்றது. மற்றொரு வலதுகையில் அபய முத்திரை காணப் படுகிறது. இடதுகை யொன்றில் தீச்சுடர் இருக்கிறது. மற்றொரு இடது கையை வீசிய கரமாக (கஜ ஹஸ்தமாக) உயர்த்தி நீட்டியிருக்கிறார். (இந்தக் கஜஹஸ்தம் திருநல்லூர் உருவத்தில் கீழே தாழ்ந்து இருக்கிறது)

திருநல்லூர்ச் சிற்பத்தில் உள்ளதுபோலவே இந்தச் சிற்பத்திலும் முயலகன் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறான். இவன் தன் இரண்டு கைகளா லும் நடராச மூர்த்தியின் திருவடிகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறான்.

இந்தத் தாண்டவப் பெருமான் தமது இடதுகாலை முயலகன் தலைமேல் ஊன்றி மிதித்து, வலதுகாலை ஊன்றி அழுத்தாமல் தூக்குகிற நிலையில் இருக்கிறார். இதற்கு மாறாகத் திருநல்லூர்த் தாண்டவப் பெருமான் வலதுகாலை முயலகன் தலைமேல் ஊன்றிமிதித்து, இடதுகாலைத் தூக்கியிருக்கிறார். இருமூர்த்தங்களும் படைத்தல் செயலாகிய காளிகா தாண்டவத்தைச் செய்கின்றன. இம்மூர்த்தங்களின் திருவடி நிலைகளை உற்றுநோக்கும்போது, கூத்தப் பெருமான் முயலகன்மேல் தம்முடைய இரண்டு திருவடிகளை மாற்றிமாற்றித் தூக்கியும் மிதித்தும் தாண்டவம் தொடங்குகிறார் என்பது தெரிகின்றது.

"

கையிலுள்ள துடியை இயக்கி ஒலியை உண்டாக்குவதும், முயலகன் செம்மாந்து உட்கார்ந்திருப்பதும், தாண்டவப் பெருமான் திருவடிகளை மாறிமாறி மிதிக்க முயலகன் மேல் தாண்டவம் தொடங்குவதும் ஆகிய இக்குறிப்புகள், இறைவன் தம்முடைய முதல் செயலாகிய படைத்தல் (சிருஷ்டி) தொழிலைச் செய்கிறார் என்பதைத் தெரிவிக்கின்றன.