உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

மூன்று தலையுடைய முத்தலைப் பாம்பை ஏந்திக் கொண்டிருக்கிறது. முத்தலைப் பாம்பு ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களைக் குறிக்கிறது. அதாவது, ஆரணி, ஜனனி, இரோயித்ரி என்னும் மூன்று சக்திகளைக் குறிக்கிறது. மற்றோர் இடதுகை வீசிய கையாக அமைந்து, சற்றுத் தூக்கிய இடது காலைச் சுட்டிக் காட்டுகிறது. தூக்கிய பாதமும், வீசிய கையும் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று அணுகியிருப்பது அருளல் (அனுக்கிரகம்) என்னும் செயலைக் காட்டும் அடையாளம். இந்தச் சிற்பத்தில் இது சிறப்பாக இல்லை.

எனவே, இந்தத் தாண்டவமூர்த்தியின் உருவம், முதல் செயலாகிய படைத்தல் செயலைத் தெரிவிக்கிறது.

தாண்டவப் பெருமான் துடியேந்திய கையைக் காதருகில் பிடித் திருப்பதும், துடியின் பக்கமாகச் செவி சாய்ந்திருப்பதும் துடியில் ஒலி உண்டாகி ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதை இச்சிற்பம் அழகுறக் காட்டுகிறது.

ஆணவத்தோடு இறுமாந்திருக்கும் முயலகன் உருவம், இருவினை களின் இறுமாந்த எழுச்சியை எவ்வளவு தெளிவாகக் காட்டுகிறது பாருங்கள்! சிறிதளவு தூக்கிய திருவடியின் நிலைக்கு ஏற்ப, வீசிய கை (கஜ ஹஸ்தம்) தாழ்ந்திருப்பது பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது.

மாயையின் தொழில் வளர்ச்சியுற்றுச் சிறப்படைகிற இந்தப் படைப்புத் தாண்டவத்தில், அழித்தல் செயலைக் குறிக்கிற அனல் ஏந்திய கை அகல விலகியிருப்பது, சிற்பக் கலைஞர், சாத்திரக் கருத்தை நன்றாக உணர்ந்திருக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறது. தாண்டவப் பொருமான் தாண்டவ வேகத்தை அடக்கிக்கொண்டு, முயலகனுக்கு முழு உரிமையைக் கொடுத்திருக்கிறார். தாண்டவம் வேகமாக நடைபெற வில்லை என்பதை அவரது கைகளும் கால்களும் மாத்திரம் காட்டுகின்றன என்று கருதவேண்டா; அவரது சடைமுடியும் தெரிவிக்கிறது. சடைமுடி ஆனந்தத் தாண்டவத்தில் அவிழ்ந்து அலைவது போல இல்லாமல், புனைந்தது புனைந்தபடியே இருக்கிறது.

திருநெல்வேலித் தாம்பிர சபையில் இந்தத் தாண்டவம் நிகழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்தச் சிற்ப உருவம் சோழர் காலத்தது. கி.பி.1,000-க்கும் 1,200-க்கும் இடைப்பட்ட காலத்தில் இது உண்டாக்கப்பட்டிருக்கலாம்.

1