உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

அரைக்குமேலே வயிற்றைச் சுற்றி கட்டப்பட்டுள்ள உதர பந்தனம் என்னும் ஆடையின் முன்றானை, தாண்டவம் செய்யும் வேகத்தினாலே இடது புறமாகப் பறக்கிறது. கழுத்து, கால்கள், கைகள், முதலியவற்றில் அணிகலன்களை அணிந்திருக்கிறார். இடது காலைக் குஞ்சிதமாகத் தூக்கி நின்றாடுகிறார். வலது கால் முயலகன் முதுகில் ஊன்றி அழுத்துகின்றது. திருவடியின்கீழே முயலகன் குப்புறக் கிடக்கிறான். அவன் தலை கூத்தப்பிரானுக்கு வலது புறமாகவும், கால்கள் அவருக்கு இடதுபுறமாகவும் இருக்கின்றன. அவன் முகம் வருத்தத்தினால் விகாரமாகக் காணப்படுகிறது. ஒரு கையில் பாம்பைப் பிடித்திருக்கிறான்; மற்றொரு கையைப் பாம்பு படமெடுப்பது போன்று கவிழ்த்துக் காட்டுகிறான். இவனது உருவம் குறளாகவும் விகாரமாகவும் இருக்கிறது. ‘தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானை' என்றும், அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்’ என்றும் திருநாவுக்கரசர் கூறியிருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. அன்றியும்,

66

தூமப்

படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிககுச் - சடலம் முடங்க வலிக்கும் முயலகன் தன்மொய்ம்பை அடங்க மிதித்தஅடி போற்றி".

என்று பதினோராந் திருமுறைச் செய்யுள்? கூறுவது கருதத்தக்கது.

இத்தாண்டவ உருவத்தின் கீழேயுள்ள பீடம், தாமரைமலர் போன்று அமைந்திருக்கிறது. கூத்தப் பெருமானைச் சூழ்ந்து திருவாசி அழகாகக் காணப்படுகிறது. திருவாசியில் இடையிடையே தீச்சுடர்கள் அழல்விட்டெரிகின்றன. இவை அழல் வட்டம்போலக் காட்சியளிக்க, இவ்வழல் வட்டத்தினுள்ளே, ஒளியின் பேரொளியாய் விளங்கும் கூத்தப் பெருமான் ஐந்தொழில் தாண்டவமாகிய ஆனந்த

தாண்டவத்தைச் செய்தருளுகின்றார்.

இவ்வாறு அமைந்துள்ள நடராசத் திருவுருவம் தமிழ் நாட்டிலே ஒவ்வொரு சிவன் கோவிலிலும் உண்டு. இவற்றுள் மிக்க அழகும் கலைப்பண்பும் அமையப்பெற்றிருப்பது, சென்னை அரசாங்கக் காட்சிசாலையில் இருக்கிற உருவந்தான். இது சென்னைக்கு வடக்கேயுள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் நிலத்திலிருந்து