உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

கோயில்களில் வாசிக்கப்பட்ட இவ்வாத்தியம் இப்போது வாசிக்கப் படுவது இல்லை. இதை வாசிப்பதற்கென்றே தனிப்பட்ட மரபினர் இருந்தனர். வாசிக்கவேண்டிய முறைகளைப் பற்றிக் கூறும் ஏட்டுச் சுவடிகளும் இருந்தன. இக்காலத்தில் இவை மறைந்து போயின. (படம்

21.)

ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து செயல்களை நடராசப் பெருமான் ஐந்துவிதத் தாண்டவங்களாகச் செய்கிறார் என்பதை அறிவோம். அந்தப் பஞ்சகிருத்தியங்களுக்கு ஏற்பப் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பஞ்சமுக வாத்தியத்தில் ஐந்து விதமான ஓசைகளை இசைத்துக் காட்டினார்கள் என்பது தெரிகின்றன. பஞ்சமுக வாத்தியத்தின் ஐந்து வாய்களிலும் பொருத்தப்பட்டிருந்த தோல்களின் பருமை, மென்மை முதலிய அமைப்புகளிலிருந்து ஐந்துவிதமான ஓசைகள் உண்டாயின.

இவ்வாத்தியக் கருவியின் ஐந்து முகங்களும் வட்டமாக அமைந்துள்ளன. இதை ‘வட்டுத் தட்டு' என்று கூறுகிறார்கள். வட்டத் தட்டு என்னும் சொல் மருவி வட்டுத் தட்டு என்று வழங்கப்படுகிறது என்று தோன்றுகிறது. நடுவில் உள்ள பெரிய வட்டத் தட்டில் பொருத்தப்பட்டிருக்கிற தோல் மற்றத் தட்டுகளில் உள்ள தோல்களை விடத் தடித்திருக்கிறது. ஆகவே, இதை இசைக்கும்போது உரத்த ஓசை இல்லாமல் மெல்லிய ஓசை உண்டாகிறது. நடுத்தட்டுக்கு இடது, வலது பக்கத்து வாய்களில் பொருத்தப்பட்டிருக்கிற தோல்கள் நடுத்தட்டுத் தோலைவிட மெல்லியவை. ஆகவே, இவற்றை இசைக்கும்போது இவைகளிலிருந்து சற்று உரத்த ஓசை உண்டாகிறது. மற்ற இரண்டு வாய்களில் பொருத்தப்பட்டுள்ள தோல்கள் மேற்கூறியவற்றைவிட மெல்லியவையாக இருப்பதனால், அவற்றிலிருந்து எழுகிற ஒலிகள் அதிக ஓசையுடையனவாக இருக்கின்றன. எனவே, பஞ்சமுக வாத்தியத்திலிருந்து இசைக்கப்படும் இசைகள் ஐந்துவிதமாக உள்ளன. (படம் 20).

"

பஞ்சமுக வாத்தியத்தின் முகம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசையின் பெயர் கூறப்படுகின்றது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசை என்றும், மத்தியில் உள்ள முகத்திற்கு ஆகாய திசை என்றும் பெயர் கூறப்படுகிறது. இக்கருவியை வாசிப்போர் வடக்குமுகத் தட்டின் அருகில் நின்று வாசிக்கிறார்.