உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுவகைத் தாண்டவம்

பொது இயல்

தாண்டவத் திருவுருவம் - சாத்திரக் கருத்து

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே! சித்தத்துள் தித்திக்குந் தேனே!

அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே! அம்பலம் ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே!

திருமாளிகைத் தேவர், திருவிசைப்பா

நடராசர் திருவுருவத்தை அறியாதவர் யார்? சிதம்பரத்தில் திருச் சிற்றம்பலத்திலே சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் என்னும் திருக் கூத்தைப் புரிகிறார் என்பதை எல்லோரும் அறிவர். நடராசர் திருவுருவம் சிவன் கோவில்களில் உண்டு. நடராசர் திருவுருவம் இல்லாத சிவன் கோவில் இல்லை என்று கூறலாம். நடராசர் திருவுருவத்தைப் பார்த்திராதவரும் இலர். பாரத நாட்டுச் சிற்பக் கலையிலே, சிறப்பாகத் தமிழ்நாட்டுச் சிற்பக் கலையிலே முதலிடங் கொண்டது நடராசர் திரு வுருவம். பாரத நாட்டுச் சிற்பக் கலைகளை ஆராய்கின்ற மேலை நாட்டவரும் கீழை நாட்டவரும் நடராசவுருவத்தைக் கண்டு மகிழ்ந்து பாராட்டுகின்றனர்.

நடராச உருவம் கண்ணுக்குங் கருத்துக்கும் இன்பம் தருகிற வெறும் கலைப் பொருள்மட்டும் அன்று.கலையைக் கடந்து அதற்கப்பாற்பட்ட சைவசமய உண்மையை விளக்குகின்ற ஒரு தத்துவமாகவும் அது விளங்குகின்றது. சைவசித்தாந்தத்தின் மூலத்தை, அடிப்படையான கொள்கையை நடராச சிற்ப உருவம் விளக்கிக் கூறுகிறது. சைவ சமயக் கருத்தும் சைவ சித்தாந்தத்தின் தத்துவமும் நடராச சிற்ப உருவத்தில்