உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

‘புசிக்கப்படாமலிருக்கிற கர்மமானது நூறுகோடி சதகோடி கற்பங்களானாலும் அழியாது” என்று பௌஷ்கராகமம் கூறுகிறது.5

உயிர், இருவினைகளில் உழன்று அலைந்து, கடைசியில் பக்குவப் பட்டு மலபரிபாகமும் இருவினையொப்பும் அடைகிறது. அப்போது அதில் 'சத்திநிபாதம்' உண்டாகிறது. சந்திநிபாதம் என்பது சிவசக்தியின் அருள் உயிரிடத்தில் படிவது ஆகும். பௌஷ்கரம் என்னும் ஆகமம் இதனை இவ்வாறு கூறுகிறது:

6

“அந்தச் சிவசக்தியானது பதியுமளவில் பசுவைச் (உயிரைச்) சிருஷ்டியாதிகளில் தள்ளுகிறதாயிருக்கிற மலத்தினுடைய சக்தியானது நிவர்த்தியாகும். அந்த மலநிவர்த்தியாகுமளவில், அந்த மலசக்தி நிவர்த்தியைடைந்த மகாத்மாவிற்கு (மாசு நீங்கிய உயிருக்கு) சீக்கிரமாகத் துக்க சாகரமாயிருக்கிற சம்சாரத்தில் விரக்தி உண்டாகும். அதனால் பரமேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளைப் பார்ப்பதற்கு இச்சை உண்டாகும். பின்னும் எப்போது கடவுளைப் காணப்போகி றேன், எப்போது பந்தத்திலிருந்து விடுபடப்போகிறேன், கடவுளைக் காட்டும் ஆசாரியர் யாவரோ என இவ்வாறு புத்தியுண்டாகும்.

66

وو

"திரோதமாகிய மறைப்பாவது அந்தப் போகங்களைப் புசிப் பித்துக் கன்ம, மலங்களைத் தொலைவிக்கத் தக்கதான அளவுகளிலே நிறுத்தினதாக இருக்கும்' என்பது சிவப்பிரகாசம்.

உயிர் பிறந்து இறந்து பலகாலும் உழல்வதனாலே அதனிடத்தில் படிந்துள்ள மலத்தின் வலி குறைகிறது. கடைசியில், அதன் ஆற்றல் குன்றி அடங்குகிறது. மலத்தை அடியோடு அழித்துவிட முடியாது. ஏனென்றால், அது ஆன்மாக்களைப்போல அனாதியானது; அழியாதது ஆனால், அதன் ஆற்றலைக் குறைத்துச் செயலற்றுக் கிடக்கச் செய்யலாம். ஆன்மாக்களிடத்தில் படிந்துள்ள மாசுகளைச் செயலற்றுக் கிடக்கச் செய்வதற்காகவே மறைத்தல் என்னும் செயலைக் கடவுள் செய்கிறார்.

“மலம் நசித்தலாவது தனது மறைத்தல் சக்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையேயன்றிப் பிறிதன்று” என்பது சிவஞான மாபாடியம்.

எனவே, மறைத்தல் (திரோபவம்) என்பது உயிர்களை மீண்டும் மீண்டும் வினைப்போகங்களில் அழுத்தி, அதன் மூலமாக உயிருக்கு மலபரிபாகமும் இருவினையொப்பும் ஏற்படச் செய்வதாம். (மலபரிபாகம் = மலம் பக்குவம் அடைதல்: இருவினை ஒப்பு = நல்வினை, தீவினைகள் சமநிலையில் இருத்தல்.)