உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

தெய்வச் சிற்பங்கள் உள்ளதை உள்ளபடியே காட்டும் நோக்க முடையன அல்ல; சிற்ப உருவங்களின் மூலமாக ஏதேனும் கருத்தை அல்லது உணர்ச்சியைக் காட்டும் நோக்கமுடையன. இயற்கை உருவத்தை உள்ளது உள்ளபடியே விளக்குவது அயல்நாட்டுச் சிற்பம்; உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் காட்டுவதற்குக் கருவியாக உள்ளது நமது நாட்டுச் சிற்பம்.

உதாரணமாக, மனித உருவத்தின் அழகையும் செவ்வியையும் சிற்பக் கலையில் நன்கு பொருந்தும்படி அக்கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகத்திலே பெரும் புகழ் பெற்ற கிரேக்க (யவன) நாட்டுச் சிற்பிகள் தமது நாட்டுக் கடவுளர்களின் உருவங்களைச் சிற்ப உருவமாக அமைத்தபோது, மனித உடலமைப்பு எவ்வளவு அழகாக அமையக்கூடுமோ அவ்வளவு அழகையும் அமையப்பொருத்தி அத் தெய்வ உருவங்களை அமைத்தார்கள். அவர்கள் அமைத்த ஜூலியஸ், வீனஸ் முதலிய பற்பல கடவுளர்களின் சிற்ப உருவங்களைக் காணும்போது, மானிட உடல் அமைப்பின் சீரிய இயல்பு அவைகளில் அமையப் பெற்றிருப்பது உண்மையிலேயே நமது கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால், நமது கருத்து அச்சிற்பங்களின் உருவ அமைப்பின் அழகோடு தங்கி நிற்கிறதே தவிர, அதற்கப்பால் செல்வதில்லை: அவை மனிதனின் நிலைக்கு மேம்பட்ட கடவுளின் உருவங்கள் என்கிற உணர்ச்சியைக் கூட நமக்கு உண்டாக்குவதில்லை.

நமது நாட்டுச் சிற்ப உருவங்களில் அமைக்கப்பட்ட தெய்வ உருவங்களோ அத்தகையன அல்ல. நமது நாட்டுச் சிற்ப உருவங்களில் கிரேக்க (யவன) சிற்பங்களைப் போன்று இயற்கையோடியைந்த அழகிய உடலமைப்பு காணப்படாதது உண்மைதான். ஆனால், இச் சிற்பங்களைக் காணும்போது நமது உள்ளமும் கருத்தும் இவ்வுருவங் களில் மட்டும் நின்றுவிடவில்லை: இவ்வுருவங்கள் நமது கருத்தை அதற்கப்பாலும் இழுத்துச் சென்று ஏதேதோ உணர்ச்சிகளையும் கருத்துகளையும் ஊட்டுகின்றன. ஆகவே, நமது சிற்பங்கள் அயல் நாட்டுச் சிற்பங்களைப் போன்று வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துகளையும், உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றன. (இந்த இயல்பு சிற்பக்கலைக்கு மட்டுமன்று: நமது நாட்டு ஓவியக் கலைக்கும் பொருந்தும்)