உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. செங்கட் சோழன்,
கணைக்கால் இரும்பொறை காலம்

செங்கட் சோழனும் கணைக்கால் இரும்பொறையும், கடைச்சங்க காலத்தின் இறுதியில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர்கள் என்று கூறினோம். இவர்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்று சில சரித்திரக் காரர்கள் தவறாகக் கூறியுள்ளதை இங்கு விளக்கிக் காட்ட விரும்புகிறோம். சோழன் செங்கணான் கி. பி. 6ஆம் நூற்றாண்டில், பல்லவ அரசர் காலத்தில் இருந்தான் என்று இவர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்குச் சான்று கிடையாது. இவர்கள் காட்டும் ஒரே சான்றும் தவறானது. அதாவது, சங்க காலப் புலவரான பொய்கையாரும் பக்தி இயக்க காலத்தில் இருந்த பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று இவர்கள் தவறாகக் கருதுவதுதான்.

தமிழர் வரலாறு என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பி.தி. சீனிவாச அய்யங்கார் முதன்முதலாக இந்தத் தவறு செய்தார். களவழி பாடிய பொய்கையாரும் விஷ்ணு பக்தரும் பல்லவர் காலத்திலிருந்தவருமான பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று தவறாகக் கருதிக் கொண்டு, பொய்கையாரால் களவழியில் பாடப்பட்ட சோழன் செங்கணான் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவன் என்று எழுதினார்.[1] இதே காரணத்தைக் கூறி மு. இராகவையங்காரும், களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் முதல் திருவந்தாதி பாடிய பொய்கை யாழ்வாரும் ஒருவரே என்று எழுதினார். டி.வி., மகாலிங்கமும் தாம் ஆங்கிலத்தில் எழுதிய தென்னிந்தியப் பழைய வரலாற்றில் காஞ்சீபுரம் என்னும் நூலில், இவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு, சோழன் செங்கணான் கி.பி 6ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறியதோடு அல்லாமல் அவன் சிம்மவிஷ்ணு பல்லவன் காலத்தில் இருந்தவன் என்றும் எழுதிவிட்டார்.[2] இவர்கள் இப்படி எழுதியிருப்பது ‘கங்காதரா மாண்டாயோ’ என்னும் கதை போலிருக்கிறதே தவிர உண்மையான சான்றும் சரியான ஆதாரமும் இல்லாத கருத்தாகும்.

பொய்கையார் என்னும் பெயர் பொய்கையூரில் பிறந்தவர் என்னும் காரணப் பெயர். பொய்கையூர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்திருக்கலாம். குளப்பாக்கம், குளத்தூர், ஆற்றூர், ஆற்றுப்பாக்கம் என்னும்

  1. 1
  2. 2