பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
117
பெயர்கள் போல. வெவ்வேறு ஊரிலிருந்த பொய்கையார்களை ஒரே பொய்கையார் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? களவழி பாடிய பொய்கையாரும், முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாரும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாடுகளில் இருந்தவர்கள். களவழி நாற்பது பாடிய பொய்கையார் மேற்குக் கடற்கரையில் இருந்த தொண்டிப்பட்டினத்தில் சேர நாட்டில் கடைச் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவர். முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த தொண்டை நாட்டில் பிறந்து பக்தி இயக்கக் காலத்தில் (பல்லவ ஆட்சிக் காலத்தில்) இருந்தவர். (பக்தி இயக்கக் காலம் என்பது கி. பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலம்.)
பக்தி இயக்கக் காலத்தில், ஏறத்தாழ கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்த பொய்கையாழ்வார் மானிடரைப் பாடாமல், விஷ்ணுவையே பாடித் தொழுதுகொண்டிருந்தவர். அவர் எந்த அரசனையும் வணங்கித் துதித்துப் பாடியவர் அல்லர். ‘வாய் அவனை அல்லது வாழ்த்தாது’ (11) என்றும் ‘மால் அடியை அல்லால் மற்றும் எண்ணத்தான் ஆமோ’ (31) என்றும் ’நாளும் கோள் நாகணை யான் குரைகழலே கூறுவதே’ (63) என்றும் ‘நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்’(83) என்றும் ‘மாயவனை அல்லாமல் இறையேனும் ஏத்தாது என் நா’ (94) என்றும் உறுதி கொண்டிருந்த பொய்கையாழ்வார் மனிதரைப் பாடாத திருமால் பக்தர்.
ஆனால், கடைச்சங்க காலத்தில் இருந்த பொய்கையாரோ, மனிதனாகிய செங்கட்சோழன் மேல் களவழி நாற்பது பாடிய புலவர். மேலும் அவர், சேரமான் கோக்கோதை மார்பனையும், பொறை யனையும் புகழ்ந்து பாடியுள்ளார். ‘தெறலழுந்தானைப் பொறையன் பாசறை’யைப் பாடியுள்ளார் (நற். 18). மேலும், சேரமான் கோக்கோதை மார்பனை அவர்,
“கள் நாறும்மே கானலத் தொண்டி
அஃதெம் ஊரே, அவன் எம் இறைவன்” (புறம் 48)
(அவன் - கோதை மார்பன்)
என்றும்,
“நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ
யாங்கன மொழிகோ ஓங்குவாள் கோதையை” (புறம் 49)