14.கொங்கு நாட்டுச் சமய நிலை
ஏனைய தமிழ்நாடுகளில் இருந்ததுபோலவே கொங்கு நாட்டிலும் அக்காலத்தில் சிவன், திருமால், முருகன், கொற்றவை முதலிய தெய்வ வழிபாடுகள் நடந்தன. முருகன் வழிபாடு அக்காலத்தில் சிறப்பாக இருந்தது. குன்றுகளிலும் மலைகளிலும் முருகனுக்குக் கோயில்கள் இருந்தன. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடுமலை அக்காலத்தில் முருகன் கோயிலுக்குப் பேர்பெற்றிருந்தது. திருமால் (மாயோன்) வழிபாடும் இருந்தது. செல்வக் கடுங்கோ வாழியாதன் மாயவண்ணனாகிய திருமாலை வழிபட்டான். அவன் திருமால் கோயிலுக்கு ஒகந்தூர் என்னும் ஊரைத் தானங் கொடுத்தான்.[1] ஆயர்கள் திருமாலைக் கண்ணன் உருவில் வழிபட்டனர்.
வெற்றிக் கடவுளாகிய கொற்றவை வீரர்களின் தெய்வம். அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசர், தங்களுடைய குல தெய்வமாக வணங்கினார்கள். கொங்கு நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அயிரை மலையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது. அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசரும் கொங்குச் சேரரும் குலதெய்வமாக வழிபட்டார்கள்.
பூதம் என்னும் தெய்வ வழிபாடும் கொங்கு நாட்டில் அக்காலத்தில் இருந்தது. கொங்கு நாட்டின் தலைநகரமான வஞ்சிக் கருவூரில் இளஞ்சேரல் இரும்பொறை பூதங்களுக்குக் கோயில் கட்டித் திருவிழாச் செய்தான்.[2] சிலப்பதிகாரம் நடுகற் காதையிலும் இச்செய்தி கூறப்படுகிறது.[3]
தமிழ்நாட்டின் வேறு ஊர்களிலும் பூதவழிபாடு அக்காலத்தில் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் நடுவிலே, பட்டினப்பாக்கத்துக்கும் மருவூர்ப்பாக்கத்துக்கும் மத்தியில் இருந்த நாளங்காடித் தோட்டத்தில் பூதசதுக்கம் என்னும் இடத்தில் பூதத்துக்குப் பேர்போன கோயில் இருந்தது. அது நகரத்தின் காவல் தெய்வம் (சிலம்பு. 5: 65- 67). சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் அவ்வூரார் இந்தப் பூதத்தை வணங்கின சிறப்புக் கூறப்படுகிறது (அடி. 59 - 88).