உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



பூதம் என்றால் இந்தக் காலத்தில் துர்த்தேவதை என்றும் இழிந்தவர் வழிபடப்படும் சிறுதெய்வம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், சங்க காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் பூதம் என்றால் சிறந்த தெய்வமாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் மனிதருக்குப் பூதத்தின் பெயர் சூட்டப்பட்டது. சங்கப் புலவர் சிலர் பூதன் என்னும் பெயர் கொண்டிருந்ததைக் காண்கிறோம். இளம்பூதனார், ஈழத்துப் பூதன் தேவனார், கரும்பிள்ளை பூதனார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதனார், காவன் முல்லைப் பூதனார், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், குன்றம்பூதனார், கோடை பாடிய பெரும்பூதனார், சேந்தம் பூதனார், மருங்கூர் பாகை சேந்தன் பூதனார், பூதபாண்டியன், வெண்பூதனார் முதலியோர் பூதன் என்னும் பெயர் பெற்றிருந்ததை அறிகிறோம். பிற்காலத்தில் பூதத்தாழ்வார் என்று பெயர் பெற்ற வைணவப் பக்தர் இருந்தார்.

பூதம் என்னும் தெய்வ வழிபாடு பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்தில் தமிழ்நாடாக இருந்த துளு நாட்டிலும், அக்காலம் முதல் இக்காலம் வரையில் பூத வழிபாடு நடந்து வருகிறது. அங்குள்ள பூதக் கோயில்களுக்குப் பூததான என்று இக்காலத்தில் பெயர் கூறப்படுகிறது (பூததான - பூதஸ்தானம்). துளு நாட்டுப் பூததானக் கோவில்களில் பூதத்தின் உருவம் இல்லை. அத்தெய்வத்தின் ஊர்திகளான புலி, பன்றி, மாடு முதலியவற்றின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. சில பூததானங்களில் வாள் இருப்பதும் உண்டு. பூசாரி தெய்வம் ஏறி மருள் கொண்டு ஆடும்போது அந்த வாளைக் கையில் ஏந்தி ஆடுவார். பூதங்களின் மேல் பாடதான என்னும் பாட்டு (துளு மொழியில்) பாடப்படுகிறது. பாடதான என்பதற்குப் பிரார்த்தனைப் பாட்டு என்பது பொருள். துளுவ மொழி திராவிட இனத்து மொழி. அம்மொழியில் சிதைந்து போன பல தமிழ்ச் சொற்கள் இன்றும் வழங்கி வருகின்றன. துளு மொழியில் உள்ள பாடதானத்தைப்பற்றி இந்தியப் பழமை என்னும் ஆங்கில வெளியீட்டில் காண்க.[1] துளு நாட்டிலும் இப்போது பூத வணக்கம் மறைந்து வருகிறது.

சங்க காலத்தில் கொங்கு நாட்டிலே வழிபடப்பட்டு வந்த பூதத் தெய்வ வணக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று.

பத்தினித் தெய்வமாகிய கண்ணகியார் வீடுபேறடைந்தது கொங்குநாட்டில் என்று கருதப்படுகின்றது. இது பற்றிக் கருத்து

  1. 4