340
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
கொன்றுபோட்டு, தன் அரசாட்சிக்குப் போட்டி இல்லதபடி செய்து கொண்டான் சேனனுக்குத் தம்பியர் மூவர் இருந்தனர். அவர்கள் பெயர் மகிந்தன், கஸ்ஸபன், உதயன் என்பன. சேனன், மூத்த தம்பியாகிய மகிந்தனை யுவராசனாக்கினான்.
பாண்டியன் போர்
இவன் காலத்தில் பாண்டிய நாடிலிருந்து பாண்டியன் படையெடுத்து வந்து இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றிக்கொண்டு, மகாதாளிதகாமம் என்னும் ஊரில் சேனையுடன் தங்கியிருந்தான். அப்போது, இலங்கையிலே அநுராதபுரம் முதலிய ஊர்களில் தங்கி வாழ்ந்திருந்த தமிழர்கள், பாண்டியனுடன் சேர்ந்து கொண்டார்கள்.
சேனன், பாண்டியனை எதிர்க்கும்படி தனது சேனாபதியான பத்தன் என்பவன் தலைமையில் சிங்களச் சேனையை அனுப்பினான். பாண்டியன் சேனையுடன் சிங்களச் சேனை போர் செய்து சிதறி ஓடிற்று. தன்னுடைய சேனை தோற்றுப் போனதைக் கண்ட சேனன், பொன்னையும் பொருளையும் எடுத்துக்கொண்டு புலத்தி நகரத்தை விட்டுத் தெற்கே மலைய நாட்டிற்குப் போய்விட்டான். யுவராசனாகிய மகிந்தன், சேனையுடன் வந்து பாண்டியனுடன் போர் செய்தான். போரில், பாண்டியனை வெல்லமுடியாமல் தற்கொலை செய்துகொண்டிருந்தான். பிறகு, அவன் தம்பியாகிய கஸ்ஸபன் போருக்கு வந்து போரிட்டுத் தோல்வியடைந்து கொண்டிவாதம் என்னும் ஊருக்குத் தப்பி ஓடினான். ஆனால், பாண்டிய வீரர்கள் அவனைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டார்கள். பாண்டியன் இலங்கையின் தலைநகரமாகிய புலத்தில் நகரத்தைப் பிடித்துக் கொண்டான்.
தலைநகரத்தைக் கைப்பற்றிய பாண்டியன், அரண்மனையிலும் நகரத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். அபயகிரி விகாரையைச் சேர்ந்த அரதனப்பாசாதத்துப் பொன் புத்த உருவத்தையும், வேறு விகாரங்களிலிருந்த பொன் உருவச் சிலைகளையும் கவர்ந்து கொண்டான். மேலும், தூபாராம விகாரையின் மேற் கூரையில் வேயப்பட்டிருந்த பொற்றகடுகளையும் வெள்ளித் தகடுகளையும் கவர்ந்து கொண்டான். இலங்கை மன்னனுடைய வீரமுரசையும் இரத்தினக் கிண்ணம் முதலியவற்றையும் கைப்பற்றினான்.