உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கோடைக்கானல் மலைகளும் பாண்டிய நாட்டின் வடக்கே இருந்தன. கோடைக்கானலில் தென்னவன் மறவனான கோடைப் பொருநன் பாண்டியருடைய சேனாதிபதியாக இருந்தனன்.11 பன்றிமலைகள் எனப்படும் வராக மலைகளும் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன. அரபிக் கடலை அடுத்திருந்த வேணாடு சங்ககாலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது.

பாண்டிய நாட்டு மலைகள்

இருங்குன்றம்

இக் குன்றம் அக்காலத்தில் கீழ்இரணியமுட்ட நாட்டைச் சேர்ந்திருந்தது. ஓங்கிருங்குன்றம். கேழிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமால்குன்று. திருமால் இருஞ்சோலை, சோலைமலை முதலான சிறப்புப் பெயர்கள் இதற்கு வழங்கின. இம் மலையில் கண்ணன். பலராமன் ஆகிய இருபெருந் தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன.12 புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று பொய்கைகள் இங்கிருந்தன.13 சிலம்பாறு அல்லது நூபுரகங்கை இம் மலையில் தோன்றிப் பாய்ந்தது.

சுமார் 16 கி. மீ. நீளமுள்ள இம் மலைகளின் குகைகளில் பல சமண முனிவர்கள் வாழ்ந்தனர்.

திருப்பரங்குன்றம்

சங்ககாலத்துப் புலவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற தெய்வம், திருப்பரங்குன்றத்து முருகனாகும். இக் குன்றத்தின் உச்சியில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் முனிவர்களின் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளில் சங்க காலத்திய நல்லந்துவனார் பெயர் காணப்படுகிறது.14

ஆனைமலை

சங்கச் செய்யுள்களில் ஆனைமலையைப்பற்றி ஒன்றும் சொல்லப் பெறவில்லை. எனினும் 'சங்க கால எழுத்துகள் இம்மலையில் உள்ளன.