உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


மகரந்தப் பொடிபோல இருந்தனர் எனவும் கூறப்பெறுகிறது.27 மதுரை நகரத்தைச் சூழ்ந்து மூன்று மதில்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. கோட்டை மதிலுக்கு வெளியே மிளைக்காடு நிறைந்த காவற்காடு இருந்தது. மிளைக் காட்டைச் சூழ்ந்து அகழி இருந்தது. கோட்டை வாயிலின் மேலே பாண்டியருடைய கயற்கொடி பறந்தன. கையில் பந்து ஏந்திய பெண் பாவை உருவங்கள் கோட்டை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்தன. கூடல் நகரத்திற்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருந்தது.28 கோட்டை வாயிலில் யவன வீரர்கள் காவல் புரிந்தனர். அவர்களுடைய தோற்றம் அஞ்சத்தக்கதாக இருந்தது.29 தாலமி ‘மதௌர’ என்னும் பெயரால் இந் நகரைச் சுட்டியுள்ளார். மதுரை நகரக் கோட்டையைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக மதிலின்மீது போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.30 மதுரைக்கு அருகில் மோகூர் இருந்தது. பிற்காலத்தில் இது 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் எனப் பெயர் பெற்றது. பாண்டிய மன்னர்களின் படைத்தலைவனாகிய பழையன் மாறன் இவ்வூர்ப்பகுதியின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தான். இவனது காவல்மரமாகிய வேம்பு, இவ்வூரில் ஓங்கி வளர்ந்திருந்தது. சேரன் செங்குட்டுவன் பழையனை வென்று இதனை வெட்டிச் சாய்த்தான்.

தங்கால் என்னும் ஊர் திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ளது. இது திருத்தங்கால் என்றும் அழைக்கப்பெறுகிறது. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், தங்கால் ஆத்திரேயன், செங்கண்ணனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அலைவாய் எனபப்டும் திருசிசெந்தில் பாண்டிய நாட்டின் கீழைக்கரை ஓரத்தில் உள்ளது. சங்ககாலம் முதல் இங்கு முருகன்கோயில் ஒன்று இருந்து வருகிறது. பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த மற்றோர் ஊராகும். இவ்வூரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையாருக்கும் சோழ நாட்டரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.31

இவை சங்க காலத்துப் பாண்டிய நாட்டின் எல்லைகளையும் அந்நாட்டில் சிறந்து காணப்பெற்ற மலைகள், ஆறுகள், பட்டினங்கள், நகரங்கள் ஆகியவற்றையும்பற்றிச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிவனவாகும். இனி, அக்காலத்துப் பாண்டிய மன்னர்களைப் பற்றி ஆராய்வோம்.