உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

385


களுக்கு இடையில் நிலவிய நிகழ்ச்சிகளைப் பற்றியோ அரசர்களைப் பற்றியோ தெளிவாக அறியமுடியவில்லை.

சமணரைப் பேணிய நெடுஞ்செழியன்

இவனைப்பற்றிய செய்திகள் மீனாட்சிபுரம் தாமிழிக் கல்வெட்டுகளால் அறியப்பெறுகின்றன. வானநூல் அறிஞரான நந்தி என்னும் சமணப் பெரியாருக்கு, இந்த நெடுஞ்செழியன் மலைக் குகையில் கற்படுக்கைகளைச் சமைத்துக் கொடுத்தான் என்ற செய்தியை இக் கல்வெட்டால் அறியமுடிகிறது. மேலும், இக்கல்வெட்டில் கடலன் வழுதி என்னும் பெருந்தச்சனைப்பற்றியும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இத் தச்சன் கற்படுக்கைகளின் தரையைச் செம்மைப்படுத்தினான். சடிகன், இளஞ்சடிகன் ஆகிய இருவருடைய பெயர்களும் இக் கல்வெட்டில் காணப் பெறுகின்றன.34

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

இவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப்பெறுகிறது. இப் பாடல் கல்வியின் சிறப்பைச் சித்திரிக்கிறது. இதில் அக்காலத்திய நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பெற்றிருந்த குறிப்பும் காணப்பெறுகிறது.35 கோவலனைக் கொலைசெய்தவன்

‘வடவாரியர் படைகடந்து
தென்றமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்’36

என்று குறிப்பிடப்படுகிறான். இவ்வாறு குறிப்பிடப்பெறும் ‘ஆரியப் படை கடந்த’ என்னும் தொடரும் புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிடும் ‘ஆரியப்படை கடந்த’ என்னும் தொடரும் ஒன்றாக அமைவதால் இவ்விருவரும் ஒருவரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இவனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இவனது வரலாற்று நிகழ்ச்சிகளே என்று கூறலாம்.

வார்த்திகனைச் சிறையிட்டது

சோழநாட்டில் பராசரன் என்னும் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவன் சேரஅரசன் ஒருவன் மறையவன் ஒருவனுக்கு வீடுபேறு