உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

407


பாடல் ஒன்று உள்ளது.[1] இந்தச் சாத்தன் இறந்தது பூதப்பாண்டியன் நடத்திய போரில் நிகழ்ந்திருக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் வடக்குப் பகுதியிலுள்ள மலைகளைக் கடந்து பொருள் தேடச் சென்றவர்களைப் பற்றியே மிகுதியாகப் பேசப்படுகிறது. ஆனால், இவன் தமிழக மக்கள் பொதிய மலையைக் கடந்து பொருள் தேடச் சென்ற மக்களைக் குறிப்பிடுவது நினைவுகூரத்தக்து.[2]

பொதிமலைப் பகுதியில் திதியன் என்பவன் ஆண்டு வந்ததை இவன் குறிப்பிடுவதோடு, அவனது செல்வச் செழிப்பையும், அவனது அரண்மனையில் முழங்கிய இன்னிசை முழக்கத்தையும் பாராட்டிக் கூறியுள்ளான். இதனால் திதியன் இவனது சிறந்த நண்பன் என்பது தெரிகிறது. இத் திதியன், பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனை எதிர்த்துத் தாக்கியது அவர்களது வரலாறுகளில் காணலாம். தலையாலங்கானத்துப் போர், நெடுஞ்செழியன் கொற்கையில் ஆண்டு கொண்டிருந்தபொழுது நிகழ்ந்ததாகையால் அக்காலத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ பூதப்பாண்டியன் மதுரையிலிருந்து அரசாண்டான் என்று கூறலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பின்னும் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்கு முன்னும் உள்ள இடைப்பட்ட காலத்தில் இவன் ஆட்சி செலுத்தினான் என்று கூறலாம்.

போரில் வஞ்சினம் கூறியபோது, புறங்காணாவிட்டால் ‘பேர் அமர் உண்கண் இவளினும் பிரிசு’ என்று வஞ்சினம் கூறும் அளவிற்கு இவனது அன்பு. மனைவியிடம் சிறந்து விளங்கியது. இவனைப் போலவே இவனது மனைவியும் இவன்மீது பேரன்பு கொண்டு விளங்கினாள். பூதப்பாண்டியன் இறந்தபோது அவளும், அவனை எரித்த தீயில் பாய்ந்து உயிர்துறந்தாள். அவள் பெயர் பெருங்கோப்பெண்டு.[3]

பசும்பூண் பாண்டியன்

‘பசும்பூண்’ என்னும் அடைமொழியைமட்டும் கொண்டு இந்தப் பாண்டியனைத் தனியான ஓர் அரசன் என்று கொள்ள முடியுமா என்பது ஆய்விற்குரியது.[4] இப் பெயர் கொண்ட அரசன், மதுரையில் இருந்து மிகச் சிறப்புடன் அரசாண்டதாகத் தெரிகிறது. அப்படியிருந்தும் எந்தப் புலவரும் இவனை நேரில் கண்டு வாழ்த்திப் பாடியதாகப் புறநானூற்றில் பாடல்கள் இல்லை. எனவே, பசும்பூண்

  1. 129
  2. 130
  3. 131
  4. 132