408
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
பாண்டியன் என்னும் பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனாக இருக்கலாமென்று கருதப்படுகிறது.
அரசுகட்டிலைக் கைப்பற்றிய போர்
பாண்டிய நாட்டின் அரியணையைக்கைப்பற்றவே இவன் போராடி இருக்கிறான். போரில் வெற்றிகண்டதால் வெண்கொற்றக் குடையை உயர்த்திப் பெரும்புகழுடன் அரசாண்டிருக்கிறான்.[1] பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் இதே நிலையினன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகனை வென்றது
அதிகன் என்பவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசன். பசும்பூண் பாண்டியன் ஒரு யானைப் படையுடன் சென்று அதிகனை வென்று தன் வெற்றிக்கொடியை உயர்த்தி. அவனது கொல்லி மலையில் யானைப் படையின் வெற்றி அணிவகுப்பை நடத்தினான். இப் போருக்குப்பின் அதிகன் பாண்டியனுடைய நண்பன் ஆனான். பின்னர்த் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் நாட்டைப் பறிகொடுத்து இந்தப் பாண்டியனின் பரடத்தலைவனாக மாறிவிட்டான்.[2]
கொங்கரை ஓட்டியது
அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவன். பசும்பூண் பாண்டியனம் அதிகனும் நண்பர்களாக மாறியபின் கீழைக் கொங்கரும் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். இந்நிலையில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்களுடன் சேர்ந்துகொண்டு பாண்டியனுக்கு எதிர்ப்பாய் விளங்கினர். பசும்பூண் பாண்டியன் இந்தக் கொங்கர்களோடு போரிட்டு அவர்களை நாட்டைவிட்டே துரத்தி விட்டான்.[3] தங்களது வேற்படைகளைப் போர்க்களத்திலேயே எறிந்து விட்டுத் தப்பியோடிய கொங்கர், குடகடல்பக்கம் ஓடிவிட்டனர். இந்தப் போரில் இவனுக்கு ஆய் அரசன் உதவி செய்தான் எனத் தெரிகிறது.[4] ஓடிய கொங்கர்களில் சிலர் வழியில் இருந்த நாட்டில் அரசாண்ட நன்னனுடன் சேர்ந்துகொண்டனர். நன்னன் மூவேந்தருக்கும் எதிரியாக இருந்தான்.