உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


விஷ்ணுவாக மாற்றிவிட்டார்கள். ஆயினும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையில் உபுல்வன் கோயில் (வருணன் கோயில்) என்றே பெயர் பெற்றிருந்தது.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையைப் போர்ச்சுகீசுக்காரர் பிடித்து ஆட்சி செய்தனர். போர்ச்சுகீசியர் மத வெறியர். போர்ச்சுகீசியச் சேனைத் தலைவன் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பேர் பெற்ற உபுல்வன் கோயிலைக் (வருணன் கோயிலை) கொள்ளை யடித்து இடித்துத் தகர்த்தழித்துப் போட்டான். போர்ச்சுகீசியர் இலங்கையில் இருந்த புகழ்பெற்ற கோயில்கள் பலவற்றை அழித்தனர். அவ்வாறு அழிக்கப்பட்ட முக்கியமான கோயில்களில் உபுல்வன் (வருணன்) கோயிலும் ஒன்ற

இலங்கைப் பழம்பொருள் ஆராய்ச்சி இலாகா (ஆர்க்கியாலஜி இலாகா) வைச் சேர்ந்த டாக்டர் பரண விதான என்பவர், மறைந்துபோன உபுல்வன் (வருணன்) கோயிலைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சி நூல் எழுதியிருக்கிறார்.3 அந்நூலில் அவர், வைதிகப் பிராமணர் வட இந்தியாவிலிருந்து வருணன் வணக்கத்தை இலங்கையில் புகுத்தியிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கண நூல்களைப் படித்திருப்பாரானால் பண்டைத் தமிழர் தமிழ் நாட்டில் வருணன் வணக்கம் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதை அறிந்திருப்பாரானால், இந்தத் தவறான முடிவுக்கு வந்திருக்கமாட்டார். தமிழ் நாட்டில் வருணன் வணக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது என்பதை அவர் அறியாதபடியால், தமிழ் நாட்டிலிருந்து வருணன் வணக்கம் இலங்கையில் புகுந்தது என்பதை அறியாமல், வட நாட்டிலிருந்து வைதிக மதத்தவரால் வருணன் வணக்கம் இலங்கையில் புகுத்தப்பட்டது என்று எழுதியுள்ளார். பக்கத்து நாட்டுச் சரித்திரம் அறியாததால் ஏற்பட்ட தவறு இது.

தமிழ் நாட்டிலிருந்து முருகன் (கந்தன்), திருமால் (விஷ்ணு), வருணன் (உபுல்வன்) என்னும் தெய்வ வணக்கம் தமிழ்நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே புகுத்தப்பட்டு அங்கு இத்தெய்வ வழிபாடுகள் நடைபெற்று வந்தன என்பதை இதனால் அறிகிறோம். இலங்கையில் பௌத்த மதம் பரவின கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுத் தெய்வங்கள் அங்குச் சிங்களவர்களிடம் முதன்மை பெறவில்லை.