486
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான சுவண்ணபிண்ட திஸ்ஸன் அரசனானான். அவன் முடிசூடிய பிறகு சூரதிஸ்ஸன் என்று பெயர்பெற்றான். அவன் கி.மு. 187 முதல் 177 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பௌத்தமதம் இலங்கையில் பரவிற்று.
அநுரையில் தமிழர் ஆட்சி
சூரதிஸ்ஸன் அநுராதபுரத்தில் இருந்து இராஜராட்டிரத்தை அரசாண்டுகொண்டிருந்தபோது, கி.மு. 177 இல் இரண்டு தமிழர்கள் சூரதிஸ்ஸனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் இலங்கையை அரசாண்டார்கள். இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் ஒன்றுமே கூறவில்லை. ஆனால், இலங்கை நூல்களான தீபவம்சம், மகாவம்சம், தூபவம்சம், பூஜாவளி, இராஜாவளி ஆகிய நூல்கள் இந்தத் தமிழர் இலங்கையை அரசாண்டதைக் கூறுகின்றன. இவர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் எந்த நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் என்பது தெரியவில்லை.
தமிழராகிய சேன்னுஓம் குட்டகனும் கப்பல் வாணிகர் என்றும், இவர்கள் இலங்கையில் குதிரைகளைக் கொண்டுவந்து குதிரை வாணிகஞ் செய்தார்கள் என்றும் (அஸ்ஸநாவிகர் - அஸ்வநாவிகர்), இவர்கள் சூரதிஸ்ஸ அரசனைவென்று இருவரும் இலங்கையை இருபத்திரண்டு ஆண்டுகள் நீதியாகச் செங்கோல் செலுத்தினார்கள் என்றும் கூறப்படுகின்றது (மகாவம்சம் 21: 10-11; துபவம்சம் 18: 47). தமிழ்நாட்டில் குதிரைகள் உற்பத்தியாகவில்லை. ஆனால், அரசர்கள் குதிரைப்படை வைத்திருந்தபடியால், அவர்களுக்குக் குதிரைகள் தேவைப்பட்டன. குதிரைகள் அரேபியா, பாரசீகம் முதலான அயல்நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதியான குதிரைகளைத் தமிழ் வாணிகர் இலங்கைக்குக் கொண்டுபோய் விற்றார்கள்.
சங்ககாலத்தில் சோழ நாட்டை அரசாண்ட இரண்டாம் கரிகாலனைப் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறுகிறார்.