பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
487
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவி’49 தொண்டைநாட்டின் துறைமுகப்பட்டினமாகிய எயிற்பட்டினத்திலும் குதிரைகள் கப்பலில் கொண்டுவரப்பட்டு இறக்குமதியாயின என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப்படையில், ‘வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம், நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை’50 எனக் கூறுகிறார்.
வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக வந்து இறக்குமதியான குதிரைகளைத் தமிழக குதிரை வாணிகர் தமிழ்நாட்டில் விற்றதுபோக எஞ்சிய குதிரைகளை இலங்கைக்குக் கொண்டுபோய் விற்றார்கள். அவர்கள் மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை நூல்களில் 'அஸ்ஸநாவிகர்' (அசுவநாவிகர், அசுவம் - குதிரை, நாவிதர் - நாவாய்க் கப்பல்களை வைத்து வாணிகம்செய்பவர்) என்று கூறப்பட்டனர். இலங்கையரசைக் கைப்பற்றின சேனனும், குட்டகனும் அசுவநாவிகனின் (குதிரை வாணிகனின்) மக்கள் என்று மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றது.
அந்தக் காலத்தில், வாணிகர் தங்களுக்குப் பாதுகாப்பாக வில்வீரர்களை வைத்திருந்தார்கள். தமிழ்நாடு வாணிகர் மட்டுமல்லர், வேற்றுநாட்டு வாணிகரும் வீரர்களைத் தங்களுக்குப் பாதுகாப்பாக அக்காலத்தில் வைத்திருந்தார்கள். இலங்கையில் குதிரை வாணிகஞ்செய்த சேனனும் குட்டகனும் வீரர்படையை வைத்திருந்தபடியால் அவர்கள் இலங்கை அரசனான சூதிரஸ்ஸனைப் போரில்வென்று அரசாட்சியைக் கைப்பற்றினார்கள்.51
மகாவம்சம் குட்டகன் என்று கூறுகிற பெயரைத் தீபவம்சம் குட்டபரிந்தன் என்று கூறுகிறது. சேனனும் குட்டகனும் இலங்கையை நீதியாக அரசாண்டார்கள் என்று மகாவம்சம் கூறுவது போலவே தீபவம்சமும் கூறுகிறது.52 தன்னுடைய ஆட்சிக்காலத்தில் குட்டபரிந்தன் (குட்டகன்) பௌத்தமத விகாரைகளுக்குத் தானஞ்செய்தான். அவன் தானஞ்செய்ததைக் கூறுகிற கல்வெட்டெழுத்துச் சாசனம் அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.52 சேனகுட்ட பரிந்தகர்களைப் பற்றி வேறுஒன்றும் தெரியவில்லை. இவர்கள் கி.மு. 177 முதல் 155 வரையில் இலங்கையை அரசாண்டார்கள்.