பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
51
தொண்டி
சங்க காலத்தில் தமிழகத்தில் இரண்டு தொண்டித் துறைமுகப்பட்டினங்கள் இருந்தன. ஒன்று, கிழக்குக் கடற்கரையில் பாண்டியருக்கு உரியதாக இருந்தது. மற்றொன்று, மேற்குக் கடற்கரையில் பூழி நாட்டில் சேரருக்கும் பொறையருக்கும் உரியதாக இருந்தது. கொங்கு நாட்டையரசாண்ட பொறையர்களுக்குத் துறைமுகப்பட்டினம் இல்லாதபடியால், அவர்கள் தொண்டியைத் தங்களுடைய துறைமுகப்பட்டினமாகக் கொண்டிருந்தார்கள். சங்கச் செய்யுள்கள் தொண்டிப்பட்டினத்தைக் கூறுகின்றன. “வெண்கோட்டியானை விறல்போர்க் குட்டுவன், தெண்திரைப் பரப்பில் தொண்டி முன்துறை” (அகம். 290, 12 :18) என்றும், “திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை” என்றும் (குறுந். 128 : 2). “வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந” என்றும் (9ஆம் பத்து 4 :21), “திண் தேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (அகம் 60:7), “கல்லெண் புள்ளியன் கானலந் தொண்டி” என்றும் (நற். 195:5), “அகல் வயல், அரிநர் அரிந்தும் தருவநர்ப் பெற்றும், தண்சேறு தாய் மதனுடை நோன்றாள், கண்போல் நெய்தல் போர் விற்பூக்கும். திண்டேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (நற். 8: 5 - 9) இந்தப் பட்டினம் கூறப்படுகிறது.
தொண்டிப் பட்டினத்தைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. கோட்டை வாயிலின் கதவில் மூவன் என்பவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தது என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது. “மூவன், முழுவலி முள்ளெயிறு அழுத்தியகதவில், கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல், தெறலருந்தானைப் பொறையன்” (நற் 18: 2 -5). யவனர்கள் தொண்டியைத் ‘திண்டிஸ்’ (Tindis) என்று கூறினார்கள்.
✽ ✽ ✽